வறட்சி என்ற நிலை வரும்போதே நீரின் அவசியத்தை அறிந்து கொள்கிறோம். ஆடம்பரமாகச் செலவழிக்கும் நீரைப் பார்த்துச் செலவழிக்க வேண்டும் என முற்படுகிறோம். அப்படியான ஒரு சூழ்நிலை தான் தற்போது தென் – கிழக்கு இங்கிலாந்தில் நிலவி வருகிறது.
அதாவது, இப்பகுதியில் குளிர்காலத்தில் சராசரிக்கும் அதிகமான மழை பெய்யாமல் பொய்த்ததால், அதிகப்படியான வறட்சி ஏற்படலாம். எனவே லண்டன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள நீர் பயன்பாடு குறித்த கட்டுப்பாடுகள் புத்தாண்டு வரை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என அந்நாட்டின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடுமையான வறட்சியானது மக்களின் நீர் பயன்பாடு குறித்த கட்டுப்பாடுகளை கூடுதலாக அதிகப்படுத்தலாம். நீச்சல் குளங்களை நிரப்புதல், பராமரித்தல் அல்லது ஜன்னல்களைச் சுத்தம் செய்தல் போன்ற அத்தியாவசியமற்ற நீர் பயன்பாட்டிற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தென் – கிழக்கு இங்கிலாந்தில் இலையுதிர் காலம் மற்றும் குளிர்காலத்தில் போதுமான கனமழை பெய்யாத பட்சத்தில், அடுத்த ஆண்டின் தொடக்கத்திலேயே கடுமையான வறட்சியை எதிர்நோக்கும். இதனால் நீர் உபயோகிப்பதில் கடுமையான கட்டுப்பாடுகள் தேவைப்படுகின்றன என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் போது வீட்டு உபயோகத் தேவையை விட இயற்கை சூழலும், விவசாயமும் கடுமையாகப் பாதிக்கப்படும் என நீர் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை நிறுவனத்தின் கொள்கை இயக்குனர் அலஸ்டர் சிஷோல்ம் தெரிவித்துள்ளார்.