புதுச்சேரி : புதுச்சேரி கடற்கரை சாலையில் நடந்த சுதந்திர தின விழாவில் தேசியக்கொடியை முதல்வர் ரங்கசாமி ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
நாடு முழுவதும் 75வது சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புதுச்சேரி அரசு சார்பில் கடற்கரை சாலை காந்தி திடலில் சுதந்திர தினவிழா நடைபெற்றது.அங்கு அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் முதல்வர் ரங்கசாமி காலை 9.13 மணிக்கு தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.தேசியகீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து, முதல்வர் ரங்கசாமி நடந்து சென்று காவலர்களின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.
விழா மேடைக்கு வந்த முதல்வர் ரங்கசாமி, சுதந்திர தின உரையாற்றினர். பின்னர், காவல் துறை உட்பட பல்வேறு துறைகளில், சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு பதக்கம் மற்றும் விருதுகளை முதல்வர் வழங்கினார்.இதைத் தொடர்ந்து, காவல் துறை, தீயணைப்புத் துறை மற்றும் தேசிய மாணவர் படையினர், பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது.
நிகழ்ச்சியில் சபாநாயகர், துணை சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ,க்கள், அரசு செயலர்கள் கலந்து கொண்டனர்.காரைக்காலில் அமைச்சர் சந்திர பிரியங்கா, மாகியில் அமைச்சர் சாய் சரவணன்குமார், ஏனாமில் அமைச்சர் லட்சுமிநாராயணன் தேசிய கொடியேற்றி, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement