சென்னை: 2022-ம் ஆண்டுக்கான பொறியியல் தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 20-ம் தேதி முதல் தொடங்கும் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக அலுவலகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ” தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு பொறியியல் கல்லூரியில் அனைத்துப் பிரிவுகளிலும் சென்ற ஆண்டைவிட விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
இந்த ஆண்டு பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 11 ஆயிரத்து 905. சென்ற ஆண்டைக் காட்டிலும், 36 ஆயிரத்து 975 மாணாக்கர் கூடுதலாக பதிவு செய்துள்ளனர். இந்த ஆண்டு பதிவுக் கட்டணம் செலுத்திய மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 69 ஆயிரத்து 80. இந்த எண்ணிக்கையும் சென்ற ஆண்டைக்காட்டிலும், 24 ஆயிரத்து 35 பேர் கூடுதலாகும்.
தமிழ்நாடு மாணவர்கள் 2022-க்கான பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் 1 லட்சத்து 58 ஆயிரத்து 157 மாணவர்களுக்கு இன்று வெளியிடப்படுகிறது.இதில் இடம்பெறாதவர்களுக்கு அடுத்து வரக்கூடிய பட்டியல்களில் வாய்ப்பு கிடைக்கும்.
இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 22 ஆயிரத்து 587 மாணாக்கர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது.
இதில் 12 ஆயிரத்து 666 மாணவர்களும், 9 ஆயிரத்து 981 மாணவிகளும் உள்ளனர். இந்த 9,981 மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும். இதற்கான ஆணையை தமிழக முதல்வர் அளித்துள்ளார். மாணவிகள் கல்லூரிகளில் சேர்ந்தால் அவர்களுக்கு இந்த தொகை அளிக்கப்படும்.
விளையாட்டுப் பிரிவில் 3102 மாணாக்கர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 1875 மாணாக்கர்கள் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, 1258 மாணாக்கருக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது. இதே போல்,முன்னாள் ராணுவத்தினர் வாரிசுதார்ரகள், மாற்றுத்திறனாளிகள் தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 20-ம் தேதி முதல் தொடங்கும். இந்த ஆண்டு 431 பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வில் பங்குபெற உள்ளது. அக்கல்லூரிகளில் அரசு இடஒதுக்கீடுகள் 1 லட்சத்து 48 ஆயிரத்து 811 இடங்கள் உள்ளன” என்று அவர் கூறினார்.