போராட்டத்தில் தலையிட்டு தீவிர செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள பிரித்தானிய பெண்ணான கெய்லி ப்ரேஸரினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
தம்மை நாடு கடத்தும் உத்தரவை ரத்துசெய்ய உத்தரவிடக்கோரி, பிரித்தானிய பெண்ணாக கெய்லி ப்ரேஸரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபிதா ராஜகருணா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
விசா ரத்து
மருத்துவ விசாவில் இலங்கை வந்த நிலையில், காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவளித்து காணொளி வெளியிட்ட கெய்லி பிரேஸரின் விசாவை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் ரத்துசெய்ததுடன், ஆகஸ்ட் 15க்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டது.
எனினும், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தனக்கு வழங்கப்பட்ட விசாவை தன்னிச்சையாக ரத்து செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் எந்தவொரு நியாயமான அடிப்படையும் இன்றி எடுக்கப்பட்ட தீர்மானம் சட்டவிரோதமானது என தீர்ப்பளித்து செல்லுபடியற்ற ஆணை பிறப்பிக்குமாறு மனுதாரர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.
எனினும் அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தது.