கொல்கத்தா: சுதந்திர தினத்தை முன்னிட்டு மம்தா பானர்ஜி ட்விட்டரில் பதிவிட்ட டிபியில் சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படங்களில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு புகைப்படம் இடம்பெறாதது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
இந்தியாவின் 75 வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளங்களில் தேசியக் கொடியை டிபியாக வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அதேபோல், வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டனர். இதனை தொடர்ந்து நேற்று பல வீடுகளில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அத்துடன் சமூக வலைதள டிபிக்களையும் பலர் தேசியக் கொடியாக மாற்றினர்.
காங்கிரஸ் எதிர்ப்பு
ஆனால், காங்கிரஸ் கட்சி மத்திய பாஜக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜவஹர்லால் நேரு தேசியக் கொடியை பிடித்திருக்கும் புகைப்படத்தை டிபியாக மாற்றினர். இந்த நிலையில் நேற்று கர்நாடக பாஜக அரசு குடியரசு தினத்தை முன்னிட்டு சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்த தகவல்களை வெளியிட்டது.
கர்நாடக அரசு
அதில், மகாத்மா காந்தியின் வரிசையில் சாவர்க்கர் புகைப்படம் இடம்பெற்று இருந்தது சர்ச்சைக்கு உள்ளானது. அம்பேத்கர் சாவர்க்கருக்கு கீழ் வரிசையிலும், அபுல் கலாம் ஆசாத் கடைசி இடத்திலும் வைக்கப்பட்டு இருந்தனர். ஆனால், அந்த விளம்பரத்தில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் புகைப்படம் இடம்பெறவில்லை. இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ட்விட்டரில் பதிவிட்டு விமர்சித்து இருந்தார்.
மம்தா பானர்ஜியின் டிபி
இந்த நிலையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, தனது ட்விட்டரில் டிபியை மாற்றினார். அதில் காந்தி, பகத் சிங், சுபாஷ் சந்திரபோஸ், சரோஜினி ராயுடு உள்ளிட்ட பலரது புகைப்படங்கள் இடம்பெற்று இருந்தன. ஆனால், நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் படம் அதில் இல்லை.
சிறுமியின் ஓவியம்
இதுகுறித்து மேற்கு வங்கத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி அபிஷேக் பானர்ஜி மம்தா வெளியிட்ட படத்துடன் தனது மகள் வரை ஓவியத்தையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் மம்தா பானர்ஜி. உங்கள் தலைவர் நரேந்திர மோடியை மகிழ்விக்க நீங்கள் திட்டமிட்டே நேருவின் படத்தை தவிர்க்கலாம், ஆனால், வரலாற்றிலிருந்து நீக்க முடியாது. எனது மகள் மகள் உங்களுக்கு அடிப்படை வரலாற்றை நினைவூட்ட முதல் சுதந்திர தின விழாவை வரைந்து இருக்கிறார்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.
காங்கிரஸ் கண்டனம்
இந்த பதிவு மேற்கு வங்க காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்டு உள்ளது. அதில், “ஒரு குழந்தை மம்தா பானர்ஜிக்கும் திரிணாமூல் காங்கிரஸுக்கு வரலாற்று பாடம் எடுத்துள்ளது. ஏனென்றால் அவர்கள் தங்கள் அரசியல் தலைவர்களை மகிழ்விக்க திட்டமிட்டே நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு படத்தை தவிர்த்துள்ளனர்.” என்று குறிப்பிட்டு உள்ளது.