சென்னை: “மருத்துவமனைகளில் மருந்துகள் தேவையான அளவு இருப்பு இருக்க வேண்டும்” என்று மழைக்கால நோய் தடுப்புக் கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
மழைக்கால நோய்கள் மற்றும் டெங்கு தடுப்பு குறித்து மாநில அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ” தமிழகத்தில் டெங்கு மற்றும் மழைக்கால தொற்று நோய்களான வயிற்றுப்போக்கு, டைபாய்டு போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் போன்ற பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து கொசு ஒழிப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்துதல், காய்ச்சல் கண்டறிதல், காய்ச்சல் கண்ட இடங்களில் உடனடி தடுப்பு நடவடிக்கைகைளை மேற்கொள்ளுதல், மருத்துவ முகாம்கள் நடத்துதல் போன்ற தொடர் நடவடிக்கைகளின் காரணமாக தமிழகத்தில் தொற்று நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 3920 அரசு மருத்துவமனைகள், 2000 தனியார் மருத்துவமனைகளில் தினசரி காய்ச்சல் கண்டவர்கள் அடையாளம் காணப்பட்டு, கிராமம் மற்றும் நகரங்கள் வாரியாக பட்டியல் தயார் செய்து அந்தந்த மாவட்டங்களுக்கு நோய்த் தடுப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து கொசுப்புழு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுமார் 21,000 தினசரி தற்காலிக பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு குறைந்து காணப்பட்டாலும், தென்மேற்கு பருவமழைக் காரணமாக டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாவதால் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட அளவில் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்குத் தேவையான உயிர்காக்கும் மருந்துகள், ரத்த அணுக்கள், பரிசோதனை கருவிகள் ரத்த கூறுகள் மற்றும் ரத்தம் ஆகியவை போதிய அளவு இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொது சுகாதாரத் துறையினரோடு இணைந்து உள்ளாட்சி அமைப்புகள், டயர் பிளாஸ்டிக் கப்புகள், தேங்காய் சிரட்டை போன்ற தேவையற்ற கொசு உற்பத்தியாகும் பொருட்களை அகற்றும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். பொது கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள், உணவகங்கள், பூங்காக்கள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள், கல்வி நிலையங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவற்றை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றது. இந்திய மருத்துமுறை மருந்துகளான நிலவேம்பு குடிநீர் மற்றும் பப்பாளி இலைச்சாறு போன்றவை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வழங்கப்பட்டு வருகின்றது.
கொசு உற்பத்தியை தடுக்க 15,853 லிட்டர் புகை அடிக்கும் இயந்திரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளான பைரித்திரம் 80,992 லிட்டர், மாலத்தியான் 12,322 லிட்டர் டெமிபாஸ் 71,523 லிட்டர் கையிருப்பில் உள்ளது. மழைக் காலங்களில் கொசு புழுக்கள், நீர்த்தேக்கங்களில் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா நோய்கள் பரவாமல் இருக்க கொசு புழு உற்பத்தியாகும் இடங்களை அடியோடு அகற்றிடவும், பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது” என்றார்.