Mettupalayam Tamil News: சிவகங்கை மாவட்டம் கன்டானபட்டி கிராமத்தை சேர்ந்தவர் காளையப்பன் (வயது 28). இவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகையில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடை எண் 1812 பாரில் கேஷியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் 14-ம் தேதி காலை பாரில் வழக்கமாக பணியை மேற்கொண்டிருந்த காளையப்பனை கடை பாருக்குள் நுழைந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தியால் சராமாரியாக வெட்டினர். இதனால், அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

இதனையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிறுமுகை காவல்துறையினர் மற்றும் மேட்டுப்பாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலாஜி உள்ளிட்டோர் சடலத்தை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பாரில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் காளையப்பன் மீது ஏற்கனவே இரு கொலை முயற்சி வழக்குகள் அவரது சொந்த ஊரில் உள்ளதாக காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். காளையப்பனை கொடூரமாக வெட்டிக்கொலை செய்வது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil