Pro Kabaddi League Auction 2022: Tamil Thalaivas – Pawan Sehrawat Tamil News : பெங்களூரு புல்ஸ் அணியின் முடி சூட மன்னாக திகழ்ந்த பவன் குமார் செராவத்துக்கு “ஹை-ஃப்ளையர்” என்ற செல்லப்பெயரை ரசிகர்கள் சூட்டினர்.
9-வது புரோ கபடி லீக் போட்டிகள் விரைவில் நடைபெற உள்ளது. 12 அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில், 5வது சீசனில் சென்னையை மையமாக கொண்டு உதயமான தமிழ் தலைவாஸ் அணியும் களமாடுகிறது. மஞ்சீத் சில்லர், ராகுல் சவுதாரி, அஜய் தாக்கூர், ஷபீர் பப்பு, ஜஸ்விர் சிங், மோஹித் சில்லர், ரன் சிங், சுர்ஜீத் சிங் மற்றும் மஞ்சீத் தஹியா உள்ளிட்ட பல பிரபல முகங்களை கொண்ட இந்த அணி, கடந்த நான்கு சீசன்களில் ஒருமுறை கூட பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை.
ஆனால், அந்தத் தடையை தகர்த்து ஏறிய, இம்முறை தமிழ் தலைவாஸ் அணியின் நிர்வாகம் ஒரு வலுவான அணியைக் கட்டமைத்துள்ளது. அந்த அணி இளம் மற்றும் அனுபவ வீரர்களை கொண்ட ஒரு சமபலம் பொருந்திய அணியாகவும் உள்ளது. சாகர், அஜிங்க்யா அசோக் பவார், அபிஷேக் எம், ஹிமான்ஷு, ஹிமான்ஷு சிங், மோஹித், ஆஷிஷ், சாஹில், ஜதின், ஹிமான்ஷு, நரேந்தர், பவன் செஹ்ராவத், தனுஷன் லக்ஷ்மமோகன், எம்டி. ஆரிப் ரப்பானி, விஸ்வநாத் வி, அர்பித் சரோஹா, கே அபிமன்யு, மற்றும் அங்கிட் போன்றோர் அடங்கிய ஒரு வலுவான அணியையும் உருவாக்கியுள்ளது.
இப்போட்டிக்காக மும்பையில் ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் நடந்த ஏலத்தில், தமிழ் தலைவாஸ் அணி அதிரடியாக வீரர்களை வாங்கிச் சேர்த்தது. அதில், அணியின் நம்பிக்கையாகவும், பாதுகாப்பு அரணாகவும் பவன் குமார் செராவத் இருக்கிறார். ஏலத்தில் அவரை தமிழ் தலைவாஸ் அணி ரூ. 2.26 கோடிக்கு ஒப்பந்தம் செய்து, பிகேஎல் வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த ஒப்பந்தம் என்பதை பதிவு செய்தது. மேலும், அவரையே அணியின் கேப்டனாகவும் நியமிக்க முடிவு செய்துள்ளது.

யார் இந்த பவன் ஷெராவத்?
புரோ கபடி லீக்கின் கடந்த மூன்று சீசன்களில் பவன் குமார் செஹ்ராவத் நம்பர் ஒன் ரைடராக திகழ்ந்து வருகிறார். அவர் புரோ கபடியின் 3வது சீசனில் பெங்களூரு புல்ஸ் அணிக்காக அறிமுகமானார். 2 சீசன்களுக்குப் பிறகு, 5வது சீசனில் அவரை குஜராத் பார்ச்சூன்ஜெயண்ட்ஸ் அணி வசப்படுத்தியது. பின்னர், மீண்டும் 6-வது சீசனில் தனது சொந்த அணியான பெங்களூரு புல்ஸ்க்கு வந்து சேர்ந்தார்.

பெங்களூரு புல்ஸ் அணியின் முடி சூட மன்னாக திகழ்ந்த அவருக்கு “ஹை-ஃப்ளையர்” என்ற செல்லப்பெயரை ரசிகர்கள் சூட்டினர். களத்தில் பாய்ந்து – பறந்து – சுழன்ற அவரின் அசத்தல் ஆட்டத்தால் 2018 ஆம் ஆண்டில் புகழின் உச்சத்திற்கே சென்றார் பவன். அந்த சீசனில் அவரது தலைமையிலான அணி புரோ கபடி லீக் கோப்பையை முதல்முறையாக முத்தமிட்டது. அவர் சீசனின் சிறந்த ரைடராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மொத்தம் 24 போட்டிகளில் களமாடி இருந்த பவன் 282 ரெய்டு புள்ளிகளைப் பெற்றார். இது சீசனில் எந்த வீரரும் பெற்ற அதிக எண்ணிக்கையிலான ரெய்டு புள்ளிகள் ஆகும்.

2021 ஆம் ஆண்டில், பெங்களூருவின் அற்புதமான ஃபார்முக்குப் பின்னால் பவன் ஒரு தனிக் காரணமாக இருந்தார். அங்கு அவர் 24 போட்டிகளில் விளையாடி 304 புள்ளிகளைக் குவித்தார். இது எந்தவொரு வீரரின் அதிகபட்சமாக இருந்தது. இதில் அவர் 27-புள்ளிகள் பெற்ற ஒரு நட்சத்திர ஆட்டமும் அடங்கும். அந்த ஆட்டத்தில் தபாங் டெல்லியை 61-22 என்ற கணக்கில் திகைக்க வைத்தனர் பெங்களூரு புல்ஸ்.
புரோ கபடி லீக் சீசன் 7ல் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு எதிராக 39 புள்ளிகளை வீழ்த்திய பெங்களூரு புல்ஸ் அணியில் அதிக எண்ணிக்கையிலான ரெய்டு புள்ளிகள் பெற்றவர் என்ற சாதனையையும் பவன் படைத்தார். இது போன்று அவர் சாதனை படைத்தது புரோ கபடி லீக்கில் மட்டும் அல்ல. சமீபத்தில் நடந்த உள்நாட்டு போட்டியில் கூட, அவரது தலைமையிலான இந்திய ரயில்வே அணி மூத்த தேசிய சாம்பியன்ஷிப்யை வென்றது. தவிர ஏற்கனவே 2 சாம்பியன்ஷிப்யையும் வென்றெடுத்துள்ளது.

2019 ஆம் ஆண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் ஒரு பகுதியாக இருந்த பவன், சர்வதேச அரங்கில் தனது திறனை வெளிப்படுத்தி இருந்தார். மேலும், அவர் அணியின் துணை கேப்டனாகவும் இருந்தார். இப்படி தான் களமாடும் அணிகளில் அசைக்க முடியா தூணாக வலம் வரும் அவர், இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணிக்காக களமிறங்க காத்திருக்கிறார். அவரின் சாதனைப் பட்டியல்களைப் பார்க்கும்போது அவர் தமிழ் தலைவாஸின் முதுகெலும்பாக திகழ்வார் என்கிற நம்பிக்கை ரசிகர்கள் மனதில் துளிர் விடுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”