அகமதாபாத்: இந்தியாவையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது குஜராத் கர்ப்பிணி பில்கிஸ் பானோ கூட்டு பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகள் 11 பேரும் விடுதலை செய்யப்பட்டிருப்பது.
2002-ல் குஜராத் மதவன்முறைகள் கட்டவிழ்த்துவிட்ட போது பில்கிஸ் பானு 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். ஆனாலும் மதவெறி கொண்ட வன்முறை கும்பல் கூட்டாக பில்கிஸ் பானுவை கூட்டு பலாத்காரம் செய்து படுகொலை செய்து வீசியது. அவ்வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்த கொடூரர்கள்தான் இப்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத் வன்முறைகள்
2002-ம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் இந்து சாதுக்கள் கருதி சாம்பலாகினர். இதனையடுத்து குஜராத் மாநிலம் முழுவதும் முஸ்லிம்கள் குறிவைத்து வேட்டையாடப்பட்டனர். உலகையே உலுக்கிய குஜராத்தில் இந்துத்துவ வெறியர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். அப்படி கொடூரமான படுகொலையை எதிர்கொண்ட அப்பாவி கர்ப்பிணி பெண்தான் பில்கிஸ் பானோ.
வன்முறை கும்பல்
2002-ல் இந்துத்துவ வெறியர்களின் பிடியில் சிக்கிவிடாமல் குஜராத்தைவிட்டே தப்பி ஓடுவதற்கு முயற்சித்த பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களில் ஒருவர் பில்கிஸ் பானோ. 2002-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ந் தேதி.. அப்போது பில்கிஸ் பானோ 5 மாத கர்ப்பிணி. 3 வயது பிஞ்சு குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் உயிரை கையில் பிடித்துக் கொண்டு அடைக்கலமாகி இருந்தார். அப்போது கைகளில் கத்தி, வாள், குண்டாந்தடியுடன் 20 முதல் 30 பேர் கொண்ட இந்துத்துவ வெறிக் கும்பல் ஒன்றின் பிடியில் பில்கிஸ் பானோவும் அவரது ஒட்டுமொத்த குடும்பமும் சிக்கிக் கொண்டது.
கூட்டு பலாத்காரம்- கொடூர படுகொலை
5 மாத கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் பில்கிஸ் பானோ கூட்டுப் பலாத்காரம் செய்து அடித்தே படுகொலை செய்யப்பட்டார். அத்துடன் நிற்கவில்லை அந்த கொடூர கும்பல்.. பில்கிஸ் பானோவின் 3 வயது குழந்தையை பிடுங்கி பாறை மீது மோதி கொலை செய்தது. இந்தப் படுகொலை சம்பவம் அனைவரையும் பெரும் அதிர்ச்சியடையவைத்து. குஜராத்தில் இந்துத்துவ வெறியர்கள் ஆடிய ஆட்டத்துக்கு ஒற்றை சாட்சியாக பில்கிஸ் பானோ கூட்டுப் பலாத்கார படுகொலை சம்பவம் இருந்தது.
11 குற்றவாளிகள் ஆயுள் தண்டனையும் விடுதலையும்
இச்சம்பவத்துக்கு காரணமான 11 மதவெறி காமுகர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அனைவருக்கே இந்த கொடூர குற்றத்துக்காக ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிபிஐ இந்த வழக்கை நடத்தி தண்டனையும் பெற்றுக் கொடுத்தது. ஆனால் இப்போது 15 ஆண்டுகளுக்கும் மேல் சிறை தண்டனை அனுபவிக்கிறோம். ஆகையால் எங்களை முன்கூட்டியே விடுதலை செய்யுங்கள் என இந்த கொலைகார கும்பல் மனுப் போட்டது. இந்த கோரிக்கையை பரிசீலிக்க குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனடிப்படையில் பஞ்சமஹால் கலெக்டர் சுஜால் மாயாத்ரா தலைமையில் ஒரு குழுவையும் அமைத்தது குஜராத் அரசு. இந்த குழுதான் 11 பயங்கர குற்றவாளிகளையும் முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என குஜராத் அரசுக்கு பரிந்துரைத்தது. இதனடிப்படையில்தான் நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட தருணத்தில் இந்த 11 பயங்கர குற்றவாளிகளும் விடுதலை செய்யப்படுள்ளனர். அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்திருக்கின்றனர் உறவினர்கள். இது ஒட்டுமொத்தமாக இந்தியாவையே அதிரச் செய்திருக்கிறது.