வாகன ஓட்டிகளின் பாதுகாவலர்: சென்னை பாடிகாட் முனீஸ்வரர் தனித்துவம் என்ன?

Chennai Tamil News: இந்தியாவில் அதிக கோயில்களையும் புண்ணிய தளங்களையும் கொண்ட மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டில், பல்வேறு கலாச்சாரம் மற்றும் வரலாற்று மிக்க தகவல்கள் அடங்கியுள்ளன. இதைவிட, மக்களின் வாழ்க்கையில் ஒன்றி, அவர்களின் உணர்வுகளுடனும் நம்பிக்கையுடனும் பயணிக்கும் விஷயங்கள் ஏராளமாக இருக்கிறது.

அவற்றில் ஒன்றாக கருதப்படுவது பாடிகாட் முனீஸ்வரர் கோயில். இந்த கோவில் வாகன ஓட்டிகளின் பாதுகாவலர் என்று கருதப்படுகிறது. புது வாகனம் வாங்குவோர், முக்கிய நிகழ்வுக்கு பயணிப்போர் மற்றும் நெடுந்தூரம் பயணம் செய்வோர் அனைவரும் இந்த கோயிலுக்கு வந்து பூஜை செய்வர். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு நீண்ட கருப்பு கயிற்றை கட்டி, எலுமிச்சை, கற்பூரம், பூ, தேங்காய் உள்ளிட்ட பொருட்களை வைத்து அர்ச்சகர்கள் பூஜை செய்வர்.

சென்னை சென்ட்ரலில் அமைந்திருக்கும் புரட்சித் தலைவர் டாக்டர் எம் ஜி ராமச்சந்திரன் ரயில் நிலையத்திலிருந்து சில மீட்டர் தொலைவில், இந்த கோயில் இருக்கிறது. அங்கு சென்றால், பல புத்தம் புதிய வாகனங்கள் அக்கோயிலின் வாசலில் நிறுத்தப்பட்டிருப்பதை நம்மால் காண முடியும்.

அந்த இடத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளாத எவருக்கும், கோயிலுக்கு வெளியே நடக்கும் செயல்பாடு விசித்திரமாகத் தோன்றலாம்.

சென்னை பல்லவன் சாலையில் உள்ள அருள்மிகு ஓம் ஸ்ரீ பாடிகாட் முனீஸ்வரன்/முனீஸ்வரர் கோயிலுக்கு பிராத்தனை செய்ய ஏராளமான பக்தர்கள் காத்திருப்பது இயல்பாகிவிட்டது. மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயில் அல்லது டிரிப்ளிகேனில் உள்ள பார்த்தசாரதி கோயில் போல் இங்கு கலை ஓவியங்கள் அல்லது பெரிய தூண்களால் அலங்கரிக்கப்படவில்லை. இருப்பினும், ஏராளமான மக்களின் நம்பிக்கையை கொண்டுள்ளது.

ஒரு சிறிய அறைக்குள், அருள்மிகு ஓம் ஸ்ரீ பாடிகாட் முனீஸ்வரரின் அரிவாள் ஏந்திய சிலை உள்ளது. பக்தர்கள் தங்கள் வாகனங்களின் சாவியை கோயிலின் பூசாரியிடம் கொடுத்து, அவர்களை தெய்வத்தின் முன் நிறுத்தி, முனீஸ்வரர் தங்களையும் தங்கள் வாகனங்களையும் கவனித்துக்கொள்வார் என்ற நம்புகின்றனர்.

கோயிலுக்கு வெளியே மற்ற அர்ச்சகர்கள் வாகனங்களுக்கு பூஜை செய்கின்றனர். வாகனங்கள் அலங்கரிக்கப்பட்டு சந்தனப் பொட்டு, மலர் மாலை மற்றும் வாகனத்தின் முன் கருப்பு கயிறு கட்டப்படுகிறது. அர்ச்சகர்கள் தேங்காய் உச்சியில் கற்பூரத்தை வைத்து, கற்பூரத்தை ஏற்றி, அதை வாகனத்தின் முன்புறம் தங்கள் உரிமையாளருடன் சேர்ந்து சுழற்றி, தீமையை விரட்டுவார்கள். பின்னர் வாகனத்தைச் சுற்றிச் சென்று தேங்காய் உடைக்கின்றனர். பின்னர் வாகனத்தின் டயர்களுக்கு அடியில் எலுமிச்சை பழங்கள் வைக்கப்பட்டு அதன் மீது உரிமையாளர் ஓட்டுவார்கள். இதனால் வாகனத்திற்கு உரிமையாளருக்கும் தீங்கு விளையாது என்று நம்புகின்றனர்.

இந்த சடங்கு ஒவ்வொரு வாகனத்திற்கும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பூஜைகளைப் பெற, நான்கு சக்கர வாகனம் 350 ரூபாயும், இரு சக்கர வாகனம் 250 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். 

பாடிகாட் முனீஸ்வரர் என்ற பெயருக்கு குறிப்பிட்ட வரலாற்று பதிவுகள் என்று எதுவும் இல்லை என்றாலும், அக்கோயிலைச் சுற்றி ஏராளமான கோட்பாடுகள் மற்றும் கட்டுக்கதைகள் உலவி வருகிறது.

வரலாற்று ஆசிரியரும், பாரம்பரிய ஆர்வலருமான வி.ஸ்ரீராம் indianexpress.com இடம் கூறுகையில், 

“இது நகரத்தின் அதிசயங்களில் ஒன்றாகும். முனீஸ்வரர் மக்களையும் அவர்களின் வாகனங்களையும் விபத்திலிருந்து பாதுகாப்பார் என்ற நம்பிக்கையால் அங்கு தங்களுடைய புதிய வாகனங்களை எடுத்து வந்து வழிபடுகின்றனர். 

தமிழகம் முழுவதும் முனீஸ்வரர் கோயில்களை நீங்கள் காணலாம், ஆனால் இந்த இடத்தில் அவர் பாடிகாட் முனீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார், ஏனெனில் இது கிழக்கிந்திய கம்பெனியுடன் தொடர்புடையது.

கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரிகள் 1639 ஆம் ஆண்டு இங்கு இருந்தபோது, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் வேலை செய்தனர்”, என்று ஸ்ரீராம் கூறினார்.

“ஆரம்பத்தில், ஆளுநர் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் வசித்து வந்தார், அது இப்போது செயலகத்தின் ஒரு பகுதியாக உள்ளது. 1690 களில், கோட்டைக்கு வெளியே ஓய்வெடுக்க தனக்கு இடம் தேவை என்று ஆளுநர் உணரத் தொடங்கினார். எனவே ஜார்ஜ் டவுனில், ஒரு நிறுவன தோட்டம் அமைக்கப்பட்டது. மேலும் கவர்னர் வார இறுதி நாட்களில் ஓய்வெடுக்க அங்கு செல்வார் ”என்று அவர் கூறினார்.

1800 வாக்கில், படையெடுப்பு அச்சுறுத்தல் இல்லாததால் ஆங்கிலேயர்கள் மிகவும் பாதுகாப்பாக இருந்தனர் என்று ஸ்ரீராம் குறிப்பிட்டார். அந்த நேரத்தில் ஆளுநர் – ராபர்ட் கிளைவின் மகன் எட்வர்ட் – அந்த தோட்ட பங்களாவை ஆளுநரின் வசிப்பிடத்திற்கு ஏற்ற ஒரு பெரிய மாளிகையாக மாற்ற முடிவு செய்ததாக அவர் கூறினார்.

“1802 முதல், கவர்னர்கள் மவுண்ட் ரோட்டில் உள்ள அரசு இல்லத்தில் வசிப்பது வழக்கமாகிவிட்டது, மேலும் அவர்கள் வேலைக்காக செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குச் செல்வார்கள். இன்று தீவு திடல் என்று அழைக்கப்படும் இடத்தில் ஆளுநரின் மெய்க்காவலர்கள் தங்க வைக்கப்பட்டனர். 

இன்று தீவு திடல் என்று அழைக்கப்படும் இடத்தில் ஆளுநரின் மெய்க்காவலர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

அவ்விடம், பாடிகாட் லைன்ஸ் என்று அழைக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் மெய்க்காப்பாளர்கள் அங்கிருந்து வந்து, அரசு இல்லத்தின் முன் கடமையில் ஈடுபட்டு, நாள் முடிவில், அவர்கள் மீண்டும் பாடிகாட் லைன்களுக்குச் செல்வார்கள், ”என்று அவர் கூறினார்.

“பாதுகாவலர்களில் பலர் முஸ்லீம்களாக இருந்ததால் ஆளுநரின் பாடிகாட் மசூதி அவ்விடத்தில் கட்டப்பட்டது. இந்த முனீஸ்வரர் கோவில், ஆளுநரின் மெய்க்காவலர்கள் வசிக்கும் பாடிகாட் லைன்களின் ஓரத்தில் இருந்த ஒரு சிறிய வழிபாட்டு கோவிலாக இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால், இது பாடிகாட் முனீஸ்வரர் கோவில் என அழைக்கப்பட்டது,” என்றார்.

“பாடிகார்டு என்ற வார்த்தை எப்படியோ 20 ஆம் நூற்றாண்டில் வந்தது, ஒவ்வொரு மாதமும் அம்மாவாசை மற்றும் பௌர்ணமி காலங்களில் நீங்கள் பெரும் கூட்டத்தைக் காண்பீர்கள். ஒரு தெய்வம் எவ்வாறு தன்னை மாற்றிக்கொண்டது என்பதற்கான மிகவும் தனித்துவமான உதாரணம் இதுதான்” என்று கூறுகிறார்.

மாதவரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் கோயிலுக்குச் செல்வது வழக்கம். இவர் கடந்த 25 ஆண்டுகளாக பல்லவன் சாலைக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து வருகிறார். மெய்க்காப்பாளர் முனீஸ்வரர் ஒரு சக்தி வாய்ந்த தெய்வம் என்றும், அவர், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புதிய வாகனம் வாங்கும்போதெல்லாம், இந்த கோயிலுக்குக் கொண்டுவந்து அருள் பெறுவார்கள் என்றார்.

“புதிய வாகனங்கள் மட்டுமல்ல, எந்த நல்ல விஷயங்கள் நடந்தாலும், நாங்கள் இங்கு வந்து பூஜை செய்கிறோம். மக்கள் தங்களால் இயன்ற அனைத்தையும் இந்த தெய்வத்திற்கு வழங்குகிறார்கள். அவர் மக்களின் கடவுள். கோழிகள் முதல் நாட்டு சுருட்டு, ஒரு பாட்டில் சாராயம் வரை, மக்கள் அனைத்தையும் வழங்குகிறார்கள். பொங்கல் வைத்து அனைவருக்கும் பிரசாதமாக வழங்குகின்றனர்.

இங்கு சராசரியாக 150 பேர் கூடுவார்கள், விசேஷ நாட்களிலும் வார இறுதி நாட்களிலும் எண்ணிக்கை அதிகரிக்கும். நாம் எதை விரும்புகிறோமோ, அது இங்கு வேண்டினால் நடக்கும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மற்றொரு பக்தர், பாடிகாட் முனீஸ்வரன் தனது குல தெய்வம் என்றார். தனது பெற்றோர், தாத்தா, பாட்டி மற்றும் கொள்ளு தாத்தாக்கள் முதல் தனது குடும்பத்தில் உள்ள அனைவரும் இந்த கோவிலுக்கு தங்கள் பிரார்த்தனைகளை செய்து வருவதாகவும், அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“நான் மற்ற நகரங்களில் இருந்தாலும், முதலீடு செய்வதற்கு முன் அல்லது புதிய திட்டத்தை எடுப்பதற்கு முன்பு நான் இங்கு வந்து பிரார்த்தனை செய்வேன். ஆரம்பத்தில், நான் இங்கு எந்த பூஜையும் செய்ய வரவில்லை, நான் கடுமையான விபத்தை சந்தித்தேன் மற்றும் எனது பொருளாதார நிலை மோசமடைந்தது. பின்பு அம்மா மூலம் அந்த கோவிலை பற்றி தெரிந்து கொண்டு, தொடர்ந்து தரிசனம் செய்ய ஆரம்பித்தேன், அன்றிலிருந்து, உடனே நல்ல காரியங்கள் நடக்க ஆரம்பித்தது. ஆகையால், நான் முழுமையாக இங்கேயே சரணடைந்தேன். பௌர்ணமி, அம்மாவாசை, மற்ற விசேஷ நாட்களில் இங்கு வருகிறோம்”, என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த கோவிலுக்கு தான் சிறு வயதிலிருந்தே வருவதாகவும், விசேஷ சமயங்களில் கோயிலுக்கு செல்வதை தவறவிடுவதில்லை என்றும் பிரியா கூறினார். அசோக் நகர் குடியிருப்பாளர் பிரியா கூறுகையில், “நான் விரும்பியது நடந்தது, மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது”, என்று கூறுகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.