விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு நோய்த்தொற்று பரவுவதைக் கேள்விப் பட்டிருப்போம். ஆனால் முதன் முறையாக குரங்கு அம்மை நோய்த்தொற்று மனிதரில் இருந்து விலங்குக்குப் பரவியுள்ளது என மருத்துவ இதழ் ஒன்று ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது.
பிரான்சில் இரண்டு ஆண்களுடன் 4 வயதான இத்தாலிய கிரேஹவுண்ட் வகை நாய் ஒன்று வசித்து வந்துள்ளது. ஆண்கள் இருவரும் குரங்கு அம்மை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இவர்களுடன் வசித்து வந்த நாய்க்கு 12 நாள்கள் கழித்து அதன் அடிவயிற்றில் கொப்புளங்கள் மற்றும் புண்கள் தோன்றி உள்ளன.
அதாவது தங்களுக்கு நோய் பாதிப்பின் அறிகுறிகள் ஏற்பட்ட உடன், இருவரும் தங்களின் நாயை மற்ற நபர்களிடமிருந்தும், மற்ற செல்லப்பிராணிகளிடமிருந்தும் தனிமைப்படுத்தினர். ஆனாலும் படுக்கையில் நாயோடு ஒன்றாகத் தூங்கி உள்ளனர்.
இந்நிலையில் அந்த நாய், குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. அதனை தொடர்ந்து குரங்கு அம்மை வைரஸ், மனிதர்களிடமிருந்து நாய்க்குப் பரவியது உறுதியானது.
இதையடுத்து மனிதர்களிடம் இருந்து செல்லப் பிராணிகளுக்கு நோய்த்தொற்று பரவுவது குறித்து எச்சரித்துள்ள நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், குரங்கு அம்மை வழிகாட்டுதலையும் வெளியிட்டது. அதில் “குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நபர், தங்கள் செல்லப் பிராணிகளோடு விளையாடுவது, கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவது, ஒன்றாக உறங்குவது, உணவுகளைப் பகிர்வது போன்றவற்றைச் செய்யக்கூடாது.
அதோடு விலங்குகளில் குரங்கு அம்மையின் முழுமையான அறிகுறிகள் எப்படி இருக்கும் என தெரியாததால், விலங்குகளுக்கு ஏற்படும் சோம்பல், பசியின்மை, இருமல், வீக்கம், மூக்கில் இருந்து நீர் வடிதல், காய்ச்சல், பரு அல்லது கொப்புளம், சரும வெடிப்பு போன்ற அறிகுறிகளை கவனிக்க வேண்டும்.
மேலும் குரங்கு அம்மை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட மனிதர்களிடமிருந்து விலங்குகளைத் தனிமைப்படுத்த வேண்டும் என எச்சரித்துள்ளது.