சென்னை: பிரபல யூடியூப் சேனலில் விமர்சகராக பணியாற்றி வந்த சினிமா டிராக்கர் கெளசிக் எல்.எம். மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தது ஒட்டுமொத்த சினிமா உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
நடிகர் ஜெயம் ரவி, இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகை மிருணாள் தாக்கூர் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் கெளசிக்கின் திடீர் மரணத்தால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் பிரபலங்கள் கெளசிக் எல்.எம். மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கெளசிக் காலமானார்
கலாட்டா யூடியூப் சேனலில் சினிமா விமர்சகராக பணியாற்றி வரும் கெளசிக் எல்.எம். புதுப் படங்களின் வசூல், அப்டேட் உள்ளிட்டவற்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பிரபலமானவர். சினிமா உலகில் பல முன்னணி நடிகர்களுடன் நட்பு வைத்திருந்த அவர் திடீரென இளம் வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது ஒட்டுமொத்த கோலிவுட்டையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
ஜெயம் ரவி இரங்கல்
ஒரு நல்ல விமர்சகரை இவ்வளவு சீக்கிரத்தில் இழந்து விட்டோம். ரொம்பவே அன்பான மனிதர் கெளசிக். வாழ்க்கை நிலையானது இல்லை என்பதற்கு இன்னொரு சாட்சியாக அவரது திடீர் மரணம் அமைந்து விட்டது என நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சீதா ராமம் ஹீரோயின் இரங்கல்
இந்த இரங்கல் செய்தியை நம்ப முடியவில்லை என சீதா ராமம் நடிகை மிருணாள் தாகூர் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். மேலும், எப்போதுமே தனக்கு ரொம்பவும் அன்பான மனிதராக இருந்தவர் கெளசிக் என்றும் அவரது மறைவு ரொம்பவே ஷாக்கிங்காக உள்ளது என்றும் பதிவிட்டுள்ளார்.
ராகவா லாரன்ஸ்
இது ரொம்பவே ஷாக்கிங்காக உள்ளது. நீங்கள் இறந்து விட்டீர்கள் என்பதை நம்பவே முடியல ப்ரோ.. அவரது குடும்பம் இந்த துயரத்தில் இருந்து மீள இறைவன் தான் அதிக சக்தியை கொடுக்க வேண்டும் என நடிகர் ராகவா லாரன்ஸ் கெளசிக் எல்.எம். படத்தை போட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ் இரங்கல்
சினிமா விமர்சகர் கெளசிக் எல்.எம் இளம் வயதில் மாரடப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது மறைவு செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறி உள்ளார்.
2 நாளைக்கு முன்பு தான் பேசினேன்
இயக்குநர் வெங்கட் பிரபு கெளசிக் எல்.எம் மறைவு செய்தி பேரதிர்ச்சியாக உள்ளது என்றும், 2 நாளைக்கு முன்பு தான் அவருடன் பேசினேன். இது ரொம்ப மோசம். வாழ்க்கையை யாராலும் கணிக்க முடியாது என தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், பல பிரபலங்கள் சமூக வலைதளத்தில் #RIPKaushikLM ஹாஷ்டேக்கில் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
தனுஷ் இரங்கல்
இது ரொம்பவே ஹார்ட் பிரேக்கிங்காக உள்ளது. ரெஸ்ட் இன் பீஸ் பிரதர்.. ரொம்பவே சீக்கிரமா எங்களை விட்டுட்டு போயிட்டீங்க.. உங்கள் குடும்பத்துக்கு எப்படித்தான் ஆறுதல் சொல்ல போறோமோன்னு தெரியல என நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.