திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு மற்றும் சுதந்திர தினமான நேற்று (திங்கள்) ஆகிய 3 நாட்கள் அதிகளவு பக்தர்கள் திரண்டனர். திருமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் காணப்பட்டனர். இதனால் காத்திருப்பு அறைகள் முழுவதும் நிரம்பி நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். இவ்வாறு காத்திருந்த பக்தர்கள் சுமார் 40 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.இந்நிலையில் நேற்று 87,692 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 36,832 பக்தர்கள் தலைமுடிகாணிக்கை செலுத்தினர். உண்டியலில் ₹5.30 கோடியை பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர். இதற்கிடையில் 3 நாள் விடுமுறை முடிந்து இன்று பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் திறக்கப்பட்டதால் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது. இன்றைய காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 30 அறைகள் நிரம்பியுள்ளது. பக்தர்கள் சுமார் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல் ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.