38 வருடங்களுக்கு முன் ராணுவ பணியில் ஈடுபட்டு, பனிச்சரிவில் சிக்கி மாயமான ராணுவ வீரரின் உடல், தற்போது சியாச்சினில் ஒரு பழைய பதுங்குக் குழியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்வுடல் 19 குமாவோன் படைப்பிரிவை சேர்ந்த சந்திரசேகர் ஹர்போலாவின் உடல் என ராணிக்கேட் சைனிக் குழு மையத்தால் கண்டறியப்பட்டுள்ளது.
1984-ல் ‘மேக்தூத்’ என்னும் ஆபரேஷனுக்காக உலகின் உயரமான போர்முனைக்கு சென்ற 20 ராணுவ வீரர்களில் ஒருவர் ஹர்போலா.
அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அக்குழு பனிச்சரிவில் சிக்கிக் கொண்டது. இதில் 15 பேரின் உடல் மீட்கப்பட்டிருந்தாலும், 5 பேரின் உடல் கிடைக்கவில்லை. இதில் ஹர்போலாவும் ஒருவர். ஹர்போலாவின் மனைவி சாந்தி தேவி தற்போது சரஸ்வதி விஹார் காலனியில் வசித்து வருகிறார்.
இதனிடையே, ஹர்போலாவின் வீட்டுக்கு வந்தடைந்த ஹல்த்வானி துணை ஆட்சியர் மணிஷ் குமாரும், தாசில்தார் சஞ்சய் குமாரும், அவரின் இறுதிச் சடங்குகள் முழு ராணுவ மரியாதையுடன் நடத்தப்படும் என்றனர்.
அவர் பனிச்சரிவில் சிக்கிய போது, அவருக்கு திருமணமாகி 9 வருடங்களாகியிருந்தது. அப்போது 28 வயதாக இருந்த சாந்தி தேவியிடம், நான்கு வயதிலும், ஒன்றரை வயதிலும் இரு பெண் குழந்தைகள் இருந்தனர். இப்போது சாந்தி தேவிக்கு 66 வயதாகிறது.
விபத்திற்கு முன் ஜனவரி 1984 -ல் அவர் , வீட்டிற்கு வந்தபோது கூடிய விரைவில் திரும்பி வருவதாக சாந்தியிடம் கூறியிருக்கிறார். அவரை நினைத்து பெருமைப்படுவதாக சாந்தி கூறுகிறார்.
ஹர்போலாவின் உடலுடன் மற்றொரு வீரரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும், ஆனால் இன்னும் யார் என்று அடையாளம் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.