நியூசிலாந்து கிரிக்கெட் அணி கடைசியாக விளையாடிய நான்கு ஐசிசி தொடர்களின் இறுதிப்போட்டிகளிலும் இடம்பிடித்தவர் ட்ரென்ட் போல்ட். அந்தளவுக்கு, அந்த அணியில் போல்ட்டின் பங்கு அளப்பரியது.
நடப்பாண்டிற்கான டி20 உலகக்கோப்பைக்கு நியூஸிலாந்து அணி தயாராகி வரும் நிலையில் போல்ட் நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்திலிருந்து தாமாக முன்வந்து விலகியிருக்கிறார். அவரின் இம்முடிவு அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.
இது குறித்து போல்ட் தெரிவிக்கையில் ” கடந்த 12 வருடங்களாக நியூஸிலாந்து அணிக்காக விளையாடி வருகிறேன். என் சிறுவயது விருப்பமும்கூட இதுதான். என் கிரிக்கெட் பயணம் இவ்வளவு காலம் வந்ததற்கு என் குடும்பமும் ஒரு காரணம். இப்போது அவர்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளேன். ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கான விளையாட்டு காலம் என்பது மிகவும் குறைவே. என் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல இதுவே சரியான தருணம் என நினைக்கிறேன். ஒப்பந்தத்தில் இல்லாததால் நான் மீண்டும் தேசிய அணியில் தேர்வு செய்யப்பட வாய்ப்பு குறைவு என்பது எனக்கு நன்றாகவே தெரியும்!” என்று கூறியிருக்கிறார். ட்ரெண்ட் போல்ட் கிரிக்கெட்டில் இருந்து தன் ஓய்வை அறிவிக்கவில்லை. ஆனால் அவர் நியூஸிலாந்து அணிக்காக விளையாடுவது இனி குறையும். ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்களுக்கு தான் முன்னுரிமை என்பது தெரிந்தும் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். இனி வரும் காலங்களில் அவர் லீக் போட்டிகளில் அதிகம் விளையாட வாய்ப்புள்ளது. போல்ட்டின் இம்முடிவுக்கு கொரோனா கட்டுப்பாடுகளும் (Bio bubble) ஓர் காரணம் என்பதை மறந்துவிட முடியாது.
போல்ட்டுக்கு எதிராக பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில் அவருக்கு ஆதரவாக ஹர்ஷா போக்லே, ஜேசன் கில்லெஸ்பி போன்றோரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஹர்ஷா போக்லே:
போல்ட்டின் இம்முடிவை பணத்தின் மீதான பேராசை காரணமாக தான் எடுத்துள்ளார் என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். அவர்களிடம் நான் கேட்கும் கேள்வி ஒன்றுதான். நீங்கள் இப்போது வேலை செய்யும் இடத்திலேயேதான் இறுதி வரை இருப்பீர்களா? இதைவிட நல்ல சம்பளத்துடன் உங்களுக்கு ஏற்ற மாதிரி வரும் வேலையை ஏற்காமல் இருப்பீர்களா? இல்லை என்பது தானே உங்கள் பதில். குழந்தைகள் உள்ள குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாமல் சர்வதேச மற்றும் டி20 லீக்கில் ஆடுவது மிகவும் சிரமமான விஷயம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்”
ஜேசன் கில்லெஸ்பி:
” நாம் ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் கிரிக்கெட்டின் போக்கு என்பது மாறிக்கொண்டேதான் வருகிறது. கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் முதலில் தங்கள் தாய்நாடிற்காக தான் விளையாட விரும்புவர். சில காலத்திற்கு பிறகு சர்வதேச போட்டிகள் குறித்த அவர்களின் முக்கியத்துவம் மாறுகிறது. போல்ட் இப்போது எடுத்துள்ள முடிவை பற்றி நாம் அதிகம் விவாதிக்க வேண்டாம் என்பது என் கருத்து. ஆனால், சர்வதேச போட்டிகளை முன்னிலையில் வைக்க சில முடிவுகளை எடுக்க ஐசிசி யோசித்து செயல்படுத்த வேண்டும்! “
மாறிவரும் கிரிக்கெட்டின் முகம்:
தொடக்கத்தில் இருந்தே பல்வேறு மாற்றங்களை தொடர்ந்து சந்தித்து வரும் விளையாட்டு கிரிக்கெட். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பின்னர் 60 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டி அறிமுகமாகி அதன் பின்னர் 50 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக உருமாறி பல ஆண்டுகள் நடைமுறையில் இருந்தது. பரிசோதனை முயற்சியில் இங்கிலாந்து கவுண்டி அணிகள் இடையே டி20 தொடர் நடத்தப்பட்டன. பின்னர் 2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பைக்கு பின்னர் இந்த வகை ஃபார்மட் அனைவரையும் கவர்ந்தது. 2008-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரின் தொடருக்குப் பின்னர் Franchise கிரிக்கெட் உலக கிரிக்கெட் அரங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. IPL-ஐ பின்பற்றி BBL, PSL, BPL, CPL, PSL, LPL போன்ற தொடர்கள் பல்வேறு நாடுகளில் தொடங்கப்பட்டன. இவற்றில் எல்லாம் வீரர்களுக்குத் தனியாக சம்பளத்தொகை வழங்கப்படும். இப்போது The Hundred, T-10 போன்ற புது வகையிலான தொடர்கள் அறிமுகமாகி அவை ரசிகர்களுக்கு புது வகையான அனுபவத்தை தரத் தொடங்கியுள்ளன.
சர்வதேச போட்டிகளில் ஆடாமல் டி20 லீக் தொடர்களில் ஆடும் அளவுக்கு அவற்றின் வளர்ச்சி அமைந்துள்ளன. உதாரணத்திற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களை கூறலாம். சமீபத்தில் அவர்களின் பயிற்சியாளரான பில் சிம்மன்ஸ் இது குறித்து பேசியிருந்தார். 2014-ம் ஆண்டில் இந்திய சுற்றுப்பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு வெஸ்ட் இண்டீஸ் அணியினர் புறப்பட்டனர். ஊதிய பிரச்சினை அதற்கான காரணம். இந்நிலையில் அந்த அணி வீரர்களின் அதிரடியான ஆட்ட அணுகுமுறை அவர்களை அணிக்கு வெளியே முக்கிய வீரர்களாக அடையாளம் காட்டியது. லீக் போட்டிகள் என்று தொடங்கினாலே அதில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் முதன்மையான இடத்தை பிடிப்பதால் அவர்களுக்கு நல்ல ஊதியமும் கிடைக்கத் தொடங்கியது. ஆனால், இதற்கு எல்லாம் அடித்தளமாக அமைந்தது அவர்களின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள்தான். இனி வருங்காலங்களில் கிரிக்கெட் வீரர்கள் சிறிது காலம் சர்வதேச போட்டிகள் ஆடிவிட்டு டி20 லீக் போட்டிகளுக்குத் திரும்பலாம். போல்ட் 12 வருடங்களுக்குப் பிறகு இத்தகைய முடிவை எடுத்துள்ளார். ஆனால், வருங்காலங்களில் எப்படிப்பட்ட முடிவுகளையும் வீரர்கள் எடுக்கலாம்.
தங்கள் நாட்டு டி20 லீக்காக தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியா உடன் நடக்கவிருந்த ஒருநாள் தொடரை ரத்து செய்தது அனைவருக்கும் நினைவிருக்கும். இதனால் ஆஸ்திரேலியாவிற்கு 30 சூப்பர் லீக் புள்ளிகள் கிடைத்தன. தென்னாப்பிரிக்கா அணிக்கு உலககோப்பைக்கு நேரடியாக தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. ஒரு கிரிக்கெட் வாரியம் தான் ஆரம்பிக்கவிருக்கும் டி20 லீக்காக அதன் உலகக்கோப்பை தேர்வுக்கு முக்கியமான ஒரு தொடரை ரத்து செய்தது சர்வதேச கிரிக்கெட் முக்கியத்துவத்தை இழந்து வருகிறதா என்ற கேள்வியை இன்னும் பலமாக எழுப்புகிறது.
போல்ட் விவகாரம் ஏதோ ஒரு வகையில் டி20 லீக் போட்டிகளுடன் தொடர்பு கொண்டு விட்டது. புதிய தொடர்கள் பலதும் அறிமுகமாகி கொண்டிருக்கும் வேளையில் அதைக் கட்டுப்படுத்த ஐசிசி சில முடிவுகளை விரைவில் எடுக்க வேண்டும். ஒரு வீரர் இரண்டு வெளிநாட்டு டி20 லீக்கில் மட்டும் பங்கேற்க வேண்டும் என்று நிபந்தனை கூட விதிக்கப்படலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.