“அதிமுகவின் கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும்” – ஓபிஎஸ்

சென்னை: “அடுத்தவர் வீட்டை மட்டுமல்ல, அரசியல் கட்சியையும் யாரும் அடாவடியாக, சட்டத்திற்குப் புறம்பாக அபகரிப்பதை நீதியும், தர்மமும் ஏற்றுக்கொள்ளாது என்பதை இன்றைய தீர்ப்பு மெய்ப்பித்து இருக்கிறது. அதிமுகவின் கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும்” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

அதிமுக பொதுக் கூட்டம் செல்லாது என்றும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்ததும் செல்லாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தர்மத்தை நம்பினேன்; நீதிமன்றங்களை நம்பினேன்; அதிமுகவை உயிராக நேசிக்கும் கழகக் கண்மணிகளை, தொண்டர்களை நம்பினேன்; உண்மையும், தர்மமும் என் பக்கம்தான் இருக்கிறது என்பதை உளமார நம்பிய தமிழ்நாட்டு மக்களை நம்பினேன்.

இவையாவிற்கும் மேலாக, தமிழ்நாட்டு மக்களுக்காக இந்த அப்பழுக்கில்லாத இயக்கத்தை தோற்றுவித்து, வளர்த்தெடுத்து, பாதுகாத்து, தங்களது ஆயுளையே அர்ப்பணித்த இயக்கத்தின் காவல் தெய்வங்களான எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரது ஆசிகளை நம்பினேன். இந்த நம்பிக்கை இன்றைக்கு உண்மையாகி இருக்கிறது.

அடுத்தவர் வீட்டை மட்டுமல்ல, அரசியல் கட்சியையும் யாரும் அடாவடியாக, சட்டத்திற்குப் புறம்பாக அபகரிப்பதை நீதியும், தர்மமும், தொண்டர்களும், பொதுமக்களும், குறிப்பாக தெய்வமும் ஏற்றுக்கொள்ளாது என்பதை இன்றைய தீர்ப்பு மெய்ப்பித்து இருக்கிறது.

அதிமுக நிறுவனர் வகுத்தெடுத்த விதிகளை துச்சமாக நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இனி, கழகத்தின் ஒற்றுமை நிலைநிறுத்தப்பட்டு, அசைக்க முடியாத எஃகு கோட்டையாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் திகழும், வெற்றி நடைபோடும் என்பது திண்ணம்.

“தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர்வழி நின்று நேர் வழி சென்றால்
நாளை நமதே”

என்னும் எம்.ஜி.ஆரின் திருமந்திரத்தை இதயப்பூர்வமாக ஏற்று, கழகத்தின் நிரந்தரப் பொதுச் செயலாளர் என்றைக்கும் நம் ஜெயலலிதாதான் என்னும் உணர்வு கொண்ட ஒன்றரை கோடி தொண்டர்களையும் அரவணைத்துச் செல்வேன்.

கழகத்தின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும்.
அண்ணா நாமம் வாழ்க!
எம்.ஜி.ஆர். நாமம் வாழ்க!
ஜெயலிலதாக நாம் வாழ்க!
” என்று அந்த அறிக்கையில் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.