அதிமுகவும், அந்த ரெண்டு பேரின் கடிதங்களும்… சபாநாயகர் அப்பாவு முடிவு இதுதான்!

தமிழகத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் தொடர்பாக சபாநாயகரிடம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியே கடிதம் அளித்துள்ளனர். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர், விஷயம் நீதிமன்றத்தில் இருப்பதால் தான் எந்தவொரு பதிலும் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார். அவரே சொல்லாத போது நான் மட்டும் என்ன சொல்ல முடியும். அதேசமயம் பழைய நடைமுறை தொடரும் என்று ஒருபோதும் கூறியது இல்லை.

புதிதாக உருவாக்கப் போகிறோம் என்றும் கூறவில்லை என்றார்.

, ஈபிஎஸ் எழுதியுள்ள கடிதம் என்பது அவர்களின் கட்சி சார்ந்த பிரச்சினை. யார் மீதும் விருப்பு, வெறுப்பு இல்லாமல் உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார். தொடர்ந்து பேசுகையில், சட்டமன்றம் வேறு. நீதிமன்றம் வேறு. சட்டமன்றத்திற்கு என்ன அதிகாரங்கள் இருக்கிறதோ, அதை பயன்படுத்தி என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ, அதை ஜனநாயக முறைப்படி நியாயமாக எடுப்போம்.

இந்த விஷயத்தில் யாருக்காகவும் காத்திருக்க மாட்டோம். சட்டமன்றத்திற்கென தனி அதிகாரங்கள் இருக்கின்றன. அதன்படி நடந்து கொள்வோம். வெளிப்படைத் தன்மையுடன் தான் இருக்கிறோம் எனக் கூறினார். சட்டமன்ற கூட்டத்தொடரை எப்படி அனைத்து தரப்பினரும் பாராட்டும் வகையில் நடத்தினோமோ, அதேபோல் இந்த விஷயத்திலும் செயல்படுவோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியது பற்றி கேட்டதற்கு, அவரும் இந்த இருக்கையில் தான் அமர்ந்தவர். எனவே மனசாட்சிப்படி பேச வேண்டும். அவரது பேச்சை நான் குற்றமாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறி நிறைவு செய்தார். சென்னையில் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா தொழிற்சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சபாநாயகர் அப்பாவு தன் பணியை மட்டும் பார்க்க வேண்டும்.

கட்டப் பஞ்சாயத்து ராஜாவாக செயல்படக் கூடாது. அதிமுகவினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று சபாநாயகர் கூறுவது தேவையற்றது. ஓபிஎஸ்சை துணை எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கொடுத்த மனுவை சபாநாயகர் சட்டப்படி ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்போது தான் மாண்புமிகு சபாநாயகர். இல்லையெனில் மாண்பில்லா சபாநாயகர் என்று அழைக்கப்படுவார் எனக் குறிப்பிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.