சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்ப்பு எங்கள் தரப்பு நியாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்று ஓபிஎஸ் வழக்கறிஞர் திருமாறன் தெரிவித்தார்.
அதிமுக பொதுக் குழுவை தனியாகக் கூட்டியதும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்ததும் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தத் தீர்ப்பு குறித்து ஓபிஎஸ் வழக்கறிஞர் திருமாறன் கூறுகையில், “இது எங்கள் தரப்பு நியாத்திற்கு ஜெயலலிதா ஆசியுடன் கிடைத்த மிகப் பெரிய வெற்றி. அதிமுக சட்ட விதிகளுக்கு கிடைத்த வெற்றி. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் எடுத்து வைத்த வாதங்களுக்கு வலு சேர்க்கும் விதமாக இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.
ஒருங்கிணைப்பாளர் எடுத்துவைத்த அனைத்து வாதங்களையும் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த மகத்தான தீர்ப்பு இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.
23.6.2022 என்ற தேதிக்கு முன்பு இருந்த நிலைதான் தொடர வேண்டும். இதன்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தொடர்ந்து நீடிக்கிறது. மேலும் 11.7.2022 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அனைத்து தீர்மானங்களும் செல்லாது. இவ்வாறு தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இபிஎஸ் மேல்முறையீட்டுக்கு சென்றால் கேவியட் மனு தாக்கல் செய்வது தொடர்பாக ஓபிஎஸ் முடிவெடுப்பார். 2 பேரும் இணைந்து பொதுக்குழுவைக் கூட்டுவதில் சிக்கல் எழுந்தால் நீதிமன்றத்தை அணுகலாம். ஆணையர் ஒருவர் நியமிக்கப்பட்டு பொதுக்குழுவை நடத்தித் தருவார்” என்று திருமாறன் கூறினார்.