சென்னை: அதிமுக பொதுக் குழுவை தனியாகக் கூட்டியதும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்ததும் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஜூலை 11 அன்று நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுக்கூட்டத்துக்கு தடை கோரியும், அதிமுகவின் நிரந்தர அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக்கோரியும் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வமும், கட்சியின் பொதுக்குழு உறுப்பினரான அம்மன் பி.வைரமுத்துவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அந்த வழக்குகளை தள்ளுபடி செய்து பொதுக்குழுக் கூட்டம் நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி பொதுக்குழுக் கூட்டம் ஜூலை 11 அன்று நடந்தது. அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், இந்த வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றமே விசாரித்து 2 வாரங்களில் தீர்வு காண வேண்டுமென உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் வழக்கை விசாரித்தார்.ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி கடந்த வாரம் 2 நாட்களாக விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கை 2 வாரங்களில் விசாரித்து முடிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், 2 நாட்களில் விசாரணையை முடித்துக்கொண்ட நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இன்று காலை தீர்ப்பு வழங்கினார்.
அந்த தீர்ப்பில், ” அதிமுகவில் ஜூன் 23ம் முன் இருந்த நிலைதான் நீடிக்கும். ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து தான் பொதுக் குழுவை கூட்டத்தை நடத்த வேண்டும். பொதுக்குழுவைக் கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
இதன்படி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட அதிமுக பொதுக் குழு முடிவு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், அந்தப் பொதுக் குழுவில் புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்து பதவிகளும் செல்லாது என்ற நிலை உருவாகி உள்ளது.
இந்நிலையில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.