அவங்க எங்கே… நாம எங்கே… அமெரிக்கா ஓட்டலில் ஜெய்சங்கர் ஆச்சர்யம்: சமூக வலைதளத்தில் வைரல் வீடியோ

புதுடெல்லி: வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்க ஓட்டலுக்கு சென்ற சம்பவம் தொடர்பாக பகிர்ந்து கொண்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அமைச்சர் ெஜய்சங்கர் கூறுகையில், ‘கொரோனா தொற்று காட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் கடந்தாண்டு நான் அமெரிக்கா சென்றேன். அங்கு எனது மகன் வேலை செய்கிறார். அவருடன் ஓட்டல் ஒன்றுக்கு சாப்பிட சென்றேன். ஓட்டலின் நுழைவு வாயிலில் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை கேட்டனர்.

உடனடியாக நான் எனது செல்போனில் இருந்த சான்றிதழை காட்டினேன். எனது மகன் தனது பர்சில் மடித்து வைத்து இருந்த தடுப்பூசி சான்றிதழை எடுத்து காட்டினார். அதை  பார்த்து வியந்தேன். அப்போது, தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? நாம் எங்கே இருக்கிறோம் என்பதை எனக்கு நானே கூறிக் கொண்டேன். கோவின் இணையத்தளம் மக்களுக்கான விஷயங்களை எளிதாக்குகிறது.

தடுப்பூசி சான்றிதழ் உள்ளிட்டவைகளை தங்களின் செல்போனில் வைத்திருப்பதால் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் இதனை நாம் காண்பிக்கலாம். உலகின் பெரும்பாலான பகுதிகளில் இந்த வசதி கிடையாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்,’ என்று கூறியுள்ளார். நார்வே தூதரக அதிகாரி எரிக் சோல்ஹெய்ம் இந்த வீடியோவை வெளியிட்டு புதிய உலகின் எடுத்துக்காட்டு என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றிய அரசுடன் தமிழகம் மோதலா?
தாய்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியின்போது. ‘ஒன்றிய அரசுக்கும் தமிழக அரசுக்கும் மோதல் நிலவுகிறதே,’ என அங்குள்ள தமிழர் ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், ‘நான் வெளிநாடுகளில் இருக்கும்போது இந்தியாவின் உள்நாட்டு அரசியலை பற்றி பேசுவது இல்லை. இந்த கேள்வியை இந்தியாவுக்கு வரும்போது கேளுங்கள். நான் மிகவும் மகிழ்ச்சியாக அதற்கு பதில் கூறுகிறேன்,’ என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.