கொழும்பு: இந்தியா, அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி இலங்கையின் ஹம்பந்தோட்டை துறைமுகத்தில் சீன உளவு கப்பல் நேற்று நங்கூரமிட்டது.
சீன ராணுவத்தின் விண்வெளி, சைபர், மின்னணு படைப் பிரிவு சார்பில் யுவான் வாங்க் என்ற பெயரில் உளவு கப்பல்கள் இயக்கப்படுகின்றன. யுவான் வாங்க் 1, 2, 3, 4, 5, 6, 7 என்ற பெயர்களில் 7 உளவு கப்பல்கள் இந்திய பெருங்கடல், பசிபிக் பெருங்கடலில் உலா வருகின்றன.
தற்போது யுவான் வாங்க் 5 என்ற சீன உளவு கப்பல் இலங்கையின் ஹம்பந்தோட்டை துறைமுகத்தை நேற்று சென்றடைந்தது. இந்த கப்பலின் வருகைக்கு ஆரம்பம் முதலே இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. அமெரிக்க அரசும் கடுமையான ஆட்சேபத்தை பதிவு செய்தது.
எனினும் இந்தியா, அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி இலங்கை துறைமுகத்தில் சீன உளவு கப்பல் நங்கூரமிட்டிருக்கிறது. வரும் 22-ம் தேதி வரை ஹம்பந்தோட்டை துறைமுகத்தில் கப்பலை நிறுத்தி வைக்க இலங்கை அரசு அனுமதி வழங்கி உள்ளது.
யுவான் வாங்க் 5 கப்பலில் 400 பேர் பணியாற்றுகின்றனர். இந்த கப்பலில் பொருத்தப்பட்டிருக்கும் ஆன்டனாக்கள், மின்னணு கருவிகள் மூலம் ஏவுகணைகள், செயற்கைக்கோள்களை துல்லியமாக கண்காணிக்க முடியும். கப்பல் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தில் இருந்து 750 கி.மீ. தொலைவு வரை உளவு பார்க்க முடியும்.
6 கடற்படைத் தளங்களை..
அந்த வகையில் இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம், கல்பாக்கம் அணு மின் நிலையம், கூடங்குளம் அணு மின் நிலையம் மற்றும் இந்தியாவின் தென் மாநிலங்களில் அமைந்திருக்கும் 6 கடற்படைத் தளங்களை சீன உளவு கப்பலால் கண்காணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
எந்த நாடாவது புதிதாக ஏவுகணை சோதனை நடத்தினால் அந்த திசை நோக்கி சீனாவின் யுவான் வாங்க் ரக உளவு கப்பல்கள் பயணம் மேற்கொண்டு ஏவுகணை குறித்து ஆய்வு செய்யும். இந்த ரக கப்பல்களை ஆய்வுக் கப்பல் என்று சீனா கூறி வந்தாலும் இவை அபாயகரமான உளவு கப்பல்கள் என்று அமெரிக்க, ஐரோப்பிய பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
பாகிஸ்தான் போர்க்கப்பல்
பாகிஸ்தான் கடற்படையின் தைமூர் போர்க்கப்பல் அண்மையில் கொழும்பு சென்றது. இந்த போர்க்கப்பலும் சீனாவின் தயாரிப்பு ஆகும். இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் ஒரே நேரத்தில் சீன உளவு கப்பல், பாகிஸ்தான் போர்க்கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியிருப்பது பெரும் விவாத பொருளாகி உள்ளது.