புதுடெல்லி: ஒவ்வொரு ரயில் நிலையத்திலும், உள்ளூர் தயாரிப்புகள் விற்பனையை ஊக்கப்படுத்த ‘ஒரே நிலையம், ஒரே தயாரிப்பு’ திட்டத்தை இந்த ஆண்டு பட்ஜெட்டில், ஒன்றிய அரசு அறிவித்தது. இதன்படி, உணவுப் பொருட்கள் முதல் கைவினைப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் வரை பல்வேறு வகையான பொருட்களை ரயில் நிலையங்களில் விற்க அனுமதிக்கப்பட உள்ளனர். தற்போது, ஐஆர்சிடிசி அனுமதி பெற்ற வணிகர்கள் மட்டுமே ரயில் நிலையங்களில் கடை வைத்து வியாபாரம் செய்ய முடியும். இதே போல, சிறு, குறு உள்ளூர் வியாபாரிகளும் 15 நாட்களுக்கு ரூ.1500 கட்டணம் செலுத்தி ரயில் நிலையத்தில் கடைகளை வைக்கலாம். அவர்களின் பொருட்களை வைக்க சிறப்பு வசதி கொண்ட சிறு கடைகள் ரயில்வே மூலம் வழங்கப்படும். மேலும், சிறு வியாபாரிகள் ரயிலில் அதிகபட்சம் ஒரு ஸ்டேஷன் வரை பயணம் செய்து தங்கள் பொருட்களை விற்பனை செய்யலாம்.இந்த திட்டத்தின் சோதனை முயற்சி வெற்றிகரமாக முடிந்துள்ளது. 78க்கும் மேற்பட்ட நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தில், விற்பனையாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.5,000 வருமானம் கிடைத்துள்ளது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.