திருப்பத்தூர்: ‛‛என்னை அசிங்கப்படுத்திய பேசியபோது கட்சியினர் யாரும் உதவ முன்வரவில்லை” என பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் வருத்தம் தெரிவித்தார்.
தமிழக பாஜகவில் செயல்பட்டு வருபவர் காயத்ரி ரகுராம். பாஜகவின் கலை, கலாச்சார பிரிவின் மாநில தலைவராக இருந்த இவர் சமீபத்தில் அதில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவராக காயத்ரி ரகுராம் நியமிக்கப்பட்டுள்ளார்.
அறிமுக கூட்டம்
இந்நிலையில் தற்போது அவர் பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி அருகே உள்ள தனியார் விடுதி வளாகத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக திருப்பத்தூர் மாவட்டத்தின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் பங்கேற்றார்.
காயத்ரி ரகுராம் பேச்சு
கூட்டத்தில் காயத்ரி ரகுராம் பேசினார். அப்போது அவர், ‛‛இந்த பிரிவை எனக்கு ஒதுக்கி பாஜகவில் பதவி கொடுத்தபோது இதரக் கட்சிகள் அனைத்தும் ஒரு பெண் என்றும் பாராமல் என்னை அசிங்கப்படுத்தினார்கள். அப்போது எல்லாம் எனக்கு யாரும் உதவ முன்வரவில்லை. என்னுடைய கட்சியை சார்ந்தவர்களே எனக்கு உதவவில்லை அது தான் உண்மை” என விரக்தியை வெளிப்படுத்தினார்.
காரணம் என்ன?
அதாவது வெளிநாடு மற்றும் அண்டை மாநிலதமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக காயத்ரி ரகுராம் நியமிக்கப்பட்டபோது அவரை சிலர் விமர்சனம் செய்தனர். இதனை குறிப்பிட்டு தான் காயத்ரி ரகுராம் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். இந்த அறிமுக கூட்டத்தில் மாநில செயலாளர் முத்துலட்சுமி கலை மற்றும் கலாச்சார பண்பாட்டு பிரிவு மாநில செயலாளர்கள் மகா காந்தி, பிற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
மனஸ்தாபம் காரணமா?
முன்னதாக தமிழக பாஜகவின் கலை, கலாச்சார பிரிவின் மாநில தலைவர் பதவியில் இருந்து காயத்ரி ரகுராம் விடுவிக்கப்பட்ட நிலையில் அவருக்கும், அண்ணாமலைக்கு இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் சிறிது நாட்களில் மீண்டும் காயத்ரி ரகுராம் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார்.