கலிபோர்னியா: மர்ம அழைப்புகள் வருவது போலீசுக்கு ஒன்றும் புதிதில்லை. ஆனால், உயிரியல் பூங்காவில் இருந்து வந்த மௌனமான செல்போன் அழைப்பால், பதறிப் போய் போலீசார் விசாரணை நடத்திய வேடிக்கையான சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. விசாரணையின் முடிவில் போலீசுக்கு கால் செய்தவர் யார் என்பது தெரிய வந்ததுதான் வேடிக்கையின் ஹைலைட்டே.
செல்போன் மோகம் என்பது மனிதர்களுக்கு மட்டுமில்லை.. ஐந்தறிவு விலங்குகளுக்கும்கூட உண்டு என்பது அவ்வப்போது நடைபெறும் வேடிக்கையான சம்பவங்கள் மூலம் உறுதியாகிறது. அதிலும் நம் மூதாதையரான குரங்குகள், செல்போன் பயன்படுத்துவதில் நமக்கு சற்றும் சளைத்தவர்களில்லை. லாவகமாக செல்போனைக் கையில் பிடிப்பது, யூடியூப்பில் வீடியோ பார்ப்பது, புகைப்படம் எடுப்பது என இது போன்ற செய்திகள் நிறைய நாம் பார்த்திருப்போம்.
இப்போது அவற்றில் ஒரு படி முன்னேறி, மற்றவர்களுக்கு போன் செய்யவும் குரங்குகள் கற்றுக் கொண்டுவிட்டன என்பதை நிரூபிப்பது மாதிரி அமெரிக்காவில் ஒரு வேடிக்கையான சம்பவம் அரங்கேறியுள்ளது.
போலீஸ் குழப்பம்
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ளது ஜூ டூ யூ (Zoo to You) எனும் உயிரியல் பூங்கா. இந்தப் பூங்காவில் இருந்து கடந்த சனிக்கிழமையன்று போலீசாருக்கு அவசர அழைப்பு ஒன்று சென்றுள்ளது. ஆனால் எதிர்முனையில் இருந்து யாரும் பேசாததால், போலீசார் குழப்பமடைந்தனர்.
விசாரணை
ஒருவேளை பேச முடியாத அளவு அபாயத்தில் இருந்து யாரேனும் போன் செய்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. எனவே சம்பந்தப்பட்ட இடத்திற்கு உடனடியாக நேரில் சென்று விசாரணை மேற்கொள்வது என அவர்கள் முடிவெடுத்தனர். ஆனால் அந்தப் பூங்காவில் போலீசார் நினைத்தது போல் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை.
யார் அந்த நபர்?
எனவே, மேலும் குழப்பமடைந்த போலீசார், அப்படியென்றால் தங்களுக்கு போன் செய்தது யார் என விசாரணையை ஆரம்பித்தனர். அதில் பூங்காவை வலம்வரப் பயன்படுத்தப்படும் கோல்ஃப் வண்டியில் இருந்த செல்போனில் இருந்துதான் தங்களுக்கு அழைப்பு வந்துள்ளது என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.
குரங்கு சேட்டை
ஆனால் செல்போனுக்கு சொந்தக்காரர் போலீசை அழைக்கவில்லை. அப்படியென்றால், தங்களுக்கு போன் செய்தது யார் என போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தினர். அப்போதுதான் அங்கிருந்த ரூட் என்ற பேர் கொண்ட குரங்கு ஒன்று, அந்த செல்போனை எடுத்துப் போலீசாருக்கு போன் செய்தது தெரியவந்தது. இது போலீசாரை மட்டுமல்ல.. அங்கிருந்த மற்ற ஊழியர்களையும் அதிர்ச்சி அடையச் செய்தது.
செல்போனில் பேச ஆசை
மற்றவர்கள் செல்போனில் பேசுவதைப் பார்த்து, அதுவும் அதே மாதிரி பேச ஆசைப்பட்டிருக்கும் போல.. ஏதேதோ எண்களை அது அமுக்கி கால் செய்யப்போக, அது போலீசாருக்கு சென்று விட்டது. பேஸ்புக்கில் இந்த சம்பவத்தை பதிவாக வெளியிட்டுள்ளார் போலீஸ் அதிகாரி ஒருவர். கூடவே ரூட் குரங்கின் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்தக் குட்டிக் குரங்கா இப்படி ஒரு சேட்டையைச் செய்தது என்பது போல் அப்பாவியாக அந்தப் புகைப்படத்தில் காணப்படுகிறது ரூட்.