குற்றாலத்தில் நடந்த `சாரல் விழா’வில் இயக்குநரும் அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளருமான ரவி மரியா கலந்து கொண்டது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜூன் மாதம் தொடங்கி மழைக்காலம் தொடங்கும் வரை தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்டும். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் குற்றாலம் வந்து அருவிகளில் குளித்து மகிழவர்.
இதையொட்டி ஆண்டு தோறும் அரசு சார்பில் ‘சாரல் விழா’ சுற்றுலாத் துறையால் நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்தாண்டு ‘சாரல் விழா’ சில தினங்களுக்கு முன் நடந்தது. சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தனுடன் திமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநரும் அதிமுகவில் நட்சத்திரப் பேச்சாளராகவும் இருக்கும் ரவி மரியாவும் கலந்து கொண்டார்.
அதிமுகவில் இருக்கிற ஒருவர் ஆளுங்கட்சிப் பிரமுகர்களுடன் மேடையேறியது உள்ளூர் அதிமுகவினரிடையே சலசலப்பை எழுப்பியதாகத் தெரிகிறது.
இத்குறித்து அறிய ரவி மரியாவையே தொடர்பு கொண்டு பேசினோம்.
“என்னுடைய சொந்த ஊர் விருதுநகர். குற்றாலம் என்னுடைய பக்கத்து மாவட்ட மண். சின்ன வயசுல இருந்தே சீசன் வந்தா அங்க போயிடுவேன். கடந்த சில வருடமா கொரோனாவால போக முடியாமக் கிடந்தது. இந்த வருஷம் மக்களை மகிழ்விக்கணும்னு மாவட்ட நிர்வாகத்துல இருந்து கூப்பிட்டாங்க. மண்ணுடைய கலைஞன், மக்களுடைய கலைஞனா கூப்பிட்டாங்கனுதான் நான் நினைக்கிறேன். இதுல அரசியலைக் கலக்கத் தேவையில்லைங்கிறது என்னுடைய கருத்து” என்றார்