ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரசின் தலைவராக நியமிக்கப்பட்ட சில மணிநேரங்களில், குலாம் நபி ஆசாத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத். அகில இந்திய அரசியல் விவகாரக் குழு உறுப்பினர், காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர், முன்னாள் மத்திய மந்திரி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். காங்கிரசின் தலைமை மாற்றம் தொடர்பாக நீண்ட காலமாகவே அதிருப்தியில் இருந்து வருகிறார் குலாம் நபி ஆசாத். இதை வெளிப்படையாகவும் பல முறை அறிவித்துள்ளார். தலைமை மாற்றம் கோரி சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 தலைவர்கள் குழுவிலும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசமாக ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட பின்னா் தொகுதி மறுவரையறை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சட்டப்பேரவைத் தோ்தலை நடத்தும் வகையில் வாக்காளா் பட்டியல் தயாரிப்பு இறுதிநிலையை எட்டியுள்ளது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் கட்சியை வலுப்படுத்த காங்கிரஸ் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரசின் தலைவராக குலாம் நபி ஆசாத் நியமிக்கப்பட்டார். ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரசின் தலைவராக நியமிக்கப்பட்ட சில மணிநேரங்களில், குலாம் நபி ஆசாத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அரசியலில் ஈடுபட்டுள்ள அவரை மீண்டும் மாநில அரசியலில் இறக்கியது பிடிக்காததால் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.