ஜோலார்பேட்டை: குடியாத்தம் ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலில் இருந்து கொடியசைக்கும் போது கொடியுடன் பெண் கார்டு தவறி விழுந்து பலியானார். கேரள மாநிலம், பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் சிவதாஸ். இவரது மனைவி மினிமோள் (36). இவர் கடந்த ஒன்றரை ஆண்டாக திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, கே.கே.சி.நகரில் தனியாக வாடகை வீடு எடுத்து வசித்து வந்தார். ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் பயணிகளின் ரயிலில் கார்டாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் காலை அசாம் மாநிலம் கவுகாத்தி ரயில் நிலையத்திலிருந்து கர்நாடக மாநிலம் பையப்பனஹள்ளி வரை செல்லும் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில், சென்னை திருவெற்றியூர் ரயில் நிலையத்தில் இருந்து ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வரை கார்டாக பணியில் இருந்தார்.
நேற்று மதியம் ரயில் குடியாத்தம்- வளத்தூர் இடையே வந்தபோது, மினிமோள் பச்சை கொடியை காட்ட முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக கார்டு பெட்டியில் இருந்து கொடியுடன் தவறி விழுந்தார். இதில் மண்டை உடைந்து மூளை சிதறி பலியானார். பின்னர் டிரைவருக்கு கார்டு மூலம் வாக்கி டாக்கியில் எந்தவித தகவலும் கிடைக்காததால் டிரைவர் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார். கார்டு இல்லாததால் ரயிலை அங்கேயே 45 நிமிடம் நிறுத்தி உள்ளனர்.
பின்னர் கார்டை தேடிச் சென்றபோது இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் மினிமோள் இறந்து கிடந்தது தெரியவந்தது. பின்னர் மாற்று கார்டு வரவழைக்கப்பட்டு ரயில் புறப்பட்டது. தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வேபோலீசார் வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் கார்டு மினிமோள் தவறி விழும் போது வைத்திருந்த பச்சை கொடியை கீழே விழாமல் கையிலேயே பிடித்துக் கொண்டு இருந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கினர். இதுகுறித்து அவரது கணவர் சிவதாஸிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.