புதுடெல்லி: ரயிலில் குழந்தைகளுக்கான பயணச்சீட்டு விதிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ரயிலில் குழந்தைகளுக்கான பயணச்சீட்டு விதிமுறைகளை இந்திய ரயில்வே மாற்றியமைத்துள்ளதாக அண்மையில் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதன்படி 1 முதல் 4 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு வாங்க வேண்டும் என்று அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால், அந்த தகவல்கள் முற்றிலும் தவறானவை. ரயிலில் குழந்தைகளுக்கான பயணச்சீட்டு விதிமுறைகளில் இந்திய ரயில்வே எந்த மாற்றமும் செய்யவில்லை. பயணிகள் விரும்பினால், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு வாங்கி அவர்களுக்கு தனியாக இருக்கை அல்லது படுக்கை வசதியுடன் கூடிய இருக்கையை பெற்றுக்கொள்ளலாம்.
தனி இருக்கை அல்லது படுக்கை வசதியுடன் கூடிய இருக்கை தேவையில்லை எனில், அந்த குழந்தைகள் கட்டணமில்லாமல் பயணம் செய்துக்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.