அச்சு அசல் நடிகர் நாசரைப் போலவே இருக்கும் அவரின் உடன் பிறந்த தம்பி ஜவஹர் சினிமாவில் நடித்துவருகிறார். அடுத்த சில தினங்களில் நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியாக இருக்கும் `ஜீவி-2′ படத்தில்தான் ஜவஹர் நடித்திருக்கிறார்.
செங்கல்பட்டு அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் ஜவஹரிடம் இப்படம் குறித்துப் பேசினோம். ”யார் மூலம் என்னைக் கண்டுபிடிச்சாங்கன்னு தெரியல. திடீர்னு ஒரு நாள் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆபிஸ்ல இருந்து போன் வந்தது. அவரே பேசினார். ’ஒரு படத்துல போலீஸ் அதிகாரி வேடத்துல நடிக்கணும். நீங்க பண்ணினா பொருத்தமா இருக்கும்னு நினைக்கிறோம்’னு சொல்லிக் கேட்டாங்க.
ஏற்கெனவே ‘பனி விழும் மலர் வனம்’னு ஒரு படத்துல ஹீரோவுக்கு அப்பாவா நடிச்சிருக்கேன். அதனால நடிக்கறதுக்குத் தயக்கமில்லை. ஆனாலும் திடீர்னு கூப்பிடுறாங்களேன்னு யோசிச்சேன்.
வயசான என் அப்பா, மனநிலை சரியில்லாத என் தம்பி இவங்க ரெண்டு பேரையும் 24 மணி நேரமும் கூடவே இருந்து கவனிச்சிக்க ஒரு ஆள் வேணும். நான்தான் இப்ப பார்த்திட்டிருக்கேன். அதனால கொஞ்சம் தயங்கினேன்.
ஆனா தயாரிப்பாளர் தரப்புல எனக்குக் கம்ஃபர்ட்டா ஷூட்டிங் ஷெட்யூல் பிளான் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டாங்க. அதனால ஷூட்டிங் போனேன். சென்னையிலதான் ஷூட்டிங். பத்து நாள் நடிச்சுக் கொடுத்தேன். நல்ல சம்பளம் தந்ததுடன் மரியாதையா நடத்தினாங்க. என் நடிப்பைப் பார்த்த சிலர் இந்தப் படத்துக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வரலாம் எனப் பாராட்டினாங்க.
”இந்த கேரக்டருக்கு முதல்ல இயக்குநர் கௌதம் மேனனை நடிக்க வைக்கணும்னு நினைச்சாங்களாம். ஆனா கால்ஷீட் பிரச்னையால அவர் பண்ணலைன்னு தொடர்ந்து நாசர்கிட்ட கேட்டதா கேள்விப்பட்டேன். அதுவும் நடக்காம கடைசியில வாய்ப்பு எனக்கு வந்து நான் நடிச்சுக்கொடுத்திருக்கேன்.
மத்தபடி நான் நடிக்கறது குறித்து நானும் நாசர்கிட்ட எதுவும் சொல்லலை. அவரும் எங்கிட்ட எதுவும் பேசிக்கலை.”