குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் பட்டப்பகலில் காரில் வைத்திருந்த ரூ.20 லட்சத்தை கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பரமத்திவேலூர் பகுதியில் அரங்கேறி உள்ளது.
பரமத்திவேலூர், பேட்டை பகுதியில் உள்ள மருதன் காலனியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் பாலசுப்பிரமணி (49). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் ஹரிஹரன் (25) இவர் பள்ளி சாலையில் கார் பார்க்கிங் வைத்து நடத்தி வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று மதியம் பரமத்தி வேலூர் பழைய பை-பாஸ் சாலையில் உள்ள ஒரு அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் இருந்து ரூ.8 லட்சத்தையும், ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து ரூ.12 லட்சத்தையும் மொத்தம் ரூ.20 லட்சத்தை எடுத்துக் கொண்டு அவர்களது காரில் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
பணம் ரூ.20 லட்சத்தையும் காரிலேயே வைத்து விட்டு திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுக்கா, காட்டுப்புத்தூரில் நிலம் ஒன்றை கிரயம் செய்ய செல்வதற்காக வீட்டிற்குள் சென்று சட்டையை மாட்டிகொண்டு மீண்டும் காரில் செல்ல காரை எடுக்க வந்த போது காரில் வைத்திருந்த ரூ.20 லட்சம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் தந்தையும், மகனும் அருகில் இருந்தவர்களிடம் ஓடிச்சென்று யாராவது இவ்வழியாக சென்றார்களா என கேட்டுள்ளனர். இதில் அங்கிருந்தவர்கள் ஒருவர் ஸ்கூட்டரிலும், இருவர் பைக்கிலும் வந்து சென்றதாக கூறியுள்ளனர். இதனையடுத்து பாலசுப்பிரமணி வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி வேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் கலையரசன், ஆய்வாளர் வீரம்மாள் மற்றும் போலீசார் வீட்டுக்குள் சென்று விட்டு வெளியே வருவதற்குள் காரில் வைக்கப்பட்டிருந்த ரூ.20 லட்சத்தை கொள்ளை அடித்துச் சென்ற 3 மர்ம நபர்களை தேடி வருகின்றனர். குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் பட்டப்பகலில் காரில் வைத்திருந்த ரூ.20 லட்சத்தை கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பரமத்திவேலூர் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM