“அதிமுகவில் தற்காலிக அவைத்தலைவர் எந்த சூழ்நிலையிலும் பொதுக்குழுவை கூட்ட முடியாது. இந்த காரணத்திற்காகவே அந்த பொதுக்குழு செல்லாததாகி விடுகிறது” என்று இன்று அதிமுக பொதுக்குழு தொடர்பாக வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார் நீதிபதி. அதே வேளையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சிக்கலை வருங்காலத்தில் சிக்கலை ஏற்படுத்தும் அம்சம் ஒன்றும் தீர்ப்பில் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஜூலை 11ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானதும் செல்லாததாக ஆகியுள்ளது. பொதுக்குழு ஏன் செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டது என்பதற்கு விரிவான விளக்கங்கள் நீதிபதியின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சிக்கலை வருங்காலத்தில் சிக்கலை ஏற்படுத்தும் அம்சம் ஒன்றும் தீர்ப்பில் இடம்பெற்றுள்ளது. இரண்டையும் இந்த தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.
ஏன் பொதுக்குழு செல்லாது..?
“அதிமுகவில் தற்காலிக அவைத்தலைவர் எந்த சூழ்நிலையிலும் பொதுக்குழுவை கூட்ட முடியாது. ஜூலை 11 பொதுக்குழு தகுதியான நபராலோ அல்லது 15 நாட்கள் முன்னறிவிப்பு செய்தோ கூட்டப்படவில்லை. ஜூன் 23க்கு பிறகு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக கூறுவதற்கு எவ்வித அடிப்படையும் இல்லை. அந்த வாதம் கற்பனையானது. கட்சி விதிகளை மீறி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மூடி மறைக்கும் வகையில் அந்த வாதம் முன்வைக்கப்பட்டு உள்ளது.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகிவிட்டால், அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ள வகை செய்யும் விதிகள், எவ்விதத்திலும் தற்காலிக அவைத் தலைவர் பொதுக்குழுவை கூட்ட அனுமதி வழங்கவில்லை. ஜூலை 11 பொதுக்குழுவுக்கு தடை விதிக்காவிட்டால், எடப்பாடி பழனிசாமி அவரது பதவியில் சவுகரியமாக அமர்ந்துவிடுவார். மனுதாரர் ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து உள்ளிட்ட கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் என்று ஆகிவிடுவதால் பொது செயலாளர் பதவிக்கான தேர்தலில் அவர்கள் போட்டியிட முடியாத நிலை ஏற்படும்.
இரட்டை தலைமைக்கு பதிலாக ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை வைத்ததற்கு எவ்வித புள்ளிவிவர அடிப்படையும் இல்லை இரட்டைத் தலைமையில் தான் நான்கரை ஆண்டுகளாக கட்சியை நடத்தியது மட்டுமல்லாமல், முதல்வர், துணை முதல்வர் போன்ற பதவிகள் மூலம் அரசையும் நடத்தி உள்ளனர். இருவரும் சேர்ந்துதான் கூட்டணி, வேட்பாளர் போன்றவற்றில் முடிவெடுத்து இருக்கிறார்கள். ஒன்றரை கோடி தொண்டர்களும் ஒற்றை தலைமை என்ற மனநிலைக்கு மாறியது எப்படி என கேள்வி எழுகிறது.
கட்சி தலைமை எடுக்கும் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதேசமயம் அந்த நடைமுறையில் விதிமீறல் இருந்தால் நீதிமன்றத்தில் நிவாரணம் கோர எவ்வித தடையும் இல்லை. அதனால் ஜூலை 11 நடந்த பொதுக்குழு செல்லாது. செல்லாத அந்த பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொடர அனுமதித்தால் கட்சி தொண்டர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும். இரு தலைவர்களுக்கு இடையிலான பிரச்சினை காரணமாக உள்ளாட்சி இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பெற முடியாமல், தாங்க முடியாத இழப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஜூன் 23க்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும்.” என்று நீண்ட விளக்கத்தை அளித்து நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக பொதுக்குழுவை செல்லாது என தீர்ப்பளித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்திற்கு என்ன சிக்கல்?
மேலும் நீதிபதி தனது தீர்ப்பில், “இரு தலைவர்களின் ஒப்புதலும் இல்லாமல் எந்த பொதுக்குழு, செயற்குழுவும் கூட்டக்கூடாது. ஒற்றைத் தலைமை குறித்து கட்சி விதிகளில் திருத்தம் செய்வது உள்ளிட்டவை குறித்து பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கூட்ட தடையில்லை. பொதுக்குழு உறுப்பினர்களில் 5ல் ஒரு பகுதியினர் முறையாக கடிதம் கொடுத்து பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென கோரினால் ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ அதை மறுக்கக் கூடாது. ஒருவேளை இருவருக்கு இடையில் எந்த காரணத்திற்காகவோ முரண் இருந்தால் இந்த பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்கும்படி நீதிமன்றத்தை நாடலாம்.” என்று கூறி ஓ.பன்னீர்செல்வம், அம்மன் வைரமுத்து ஆகியோரின் மனுக்களை முடித்துவைத்தனர்.
தீர்ப்பின் இந்த சாராம்சத்தை எடப்பாடி பழனிசாமி கையில் எடுக்கும்பட்சத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சிக்கல் எழக்கூடும். கடந்த இரு பொதுக்குழுவிலும் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருந்தனர். அவர்களை பொதுக்குழுவை கூட்டுமாறு தம்மிடமும் (இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில்) ஓ.பன்னீர்செல்வத்திடமும் (ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில்) மனு அளிக்கச் செய்து, ஓ.பி.எஸ் தரப்பை நெருக்கடிக்கு தள்ள முடியும். பொதுக்குழுவை கூட்ட ஓ.பி.எஸ் மறுக்கும்பட்சத்தில் இதே நீதிமன்றத்தை நாடி ஆணையரை நியமித்து பொதுக்குழுவை கூட்டும் வசதியும் இதே தீர்ப்பில் இடம்பெற்று விட்டதால் ஓ.பி.எஸ் தரப்புக்கு தீர்ப்பின் இந்த அம்சன் சிக்கலை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகவே இருக்கக்கூடும்.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீட்டிற்கு உச்சநீதிமன்றத்திற்கு செல்ல போகிறார்களா? அல்லது தீர்ப்பின் இந்த அம்சத்தை வைத்து ஓ.பி.எஸ் தரப்பை நெருக்கடிக்கு தள்ளும் முயற்சியில் இறங்கப் போகிறார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM