கவுகாத்தி: 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு அஸாமில் மீண்டும் சிஏஏ எனும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. வரும் நாட்களில் இந்த போராட்டம் வடகிழக்கு மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் நடக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய பாஜக அரசு சார்பில் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) கொண்டு வரப்படுவதாக அறிவிப்பு செய்யப்பட்டது. எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த 2019 டிசம்பரில் இந்திய குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இது கடும் சர்ச்சையை கிளப்பியது. அதாவது இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு எதிரானதாக இது அமைந்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
சிஏஏ என்றால் என்ன?
அதாவது 2014 டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பு ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர், ஜைனர்கள், பார்சிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வழிவகை செய்யும். இதற்காக இந்திய குடியுரிமை சட்டம் 1955ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் இதில் முஸ்லிம்கள் பற்றி எந்த விபரமும் குறிப்பிடப்படவில்லை.
வெடித்த போராட்டம்
இதனால் குடியுரிமை திருத்த சட்டம் என்பது முஸ்லிம்கள் மக்களுக்கு எதிரானது என்ற விவாதம் எழுந்து சர்ச்சையானது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. நாட்டின் பல்வேறு இடங்களில் சிஏஏவுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. 2019 முதல் 2020 வரை போராட்டம் மிகவும் வீரியமாக நடந்தது. அதன்பிறகு கொரோனா காலம் என்பதால் போராட்டம் முடங்கியது. இருப்பினும் சிஏஏவுக்கு எதிரான கருத்துகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன.
மீண்டும் துவங்கிய போராட்டம்
இந்நிலையில் தான் மீண்டும் வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் துவங்கி உள்ளன. இந்நிலையில் அசாம் மாநிலத்தில் இன்று போராட்டம் துவங்கியது. அசாம் அனைத்து மாணவர்கள் சங்கம், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்த வேளையில், வடகிழக்கு மாணவர் அமைப்பினர் மாநிலம் முழுவதும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனால் அசாமில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து செயல்பட்டு போராட்டத்தை தடுத்து நிறுத்தினர்.
தீவிரமாக வாய்ப்பு
கடந்த 2 ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெறாத நிலையில் இன்று போராட்டம் நடைபெற்றது. இதனால் வரும் நாட்களில் போராட்டம் தீவிரமாகலாம் என கூறப்படுகிறது. இந்த போராட்டத்தின்போது குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறுதல்,அசாம் ஒப்பந்தத்தை அமல்படுத்துதல், தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள், ஆயுதப்படை சட்டம் மற்றும் அசாம், மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள உள்நுழைவு சீட்டுத் திட்டம் ஆகியவற்றை திரும்பப் பெறுதல் உள்ளிட்டவற்றை முன்வைத்து போராடலாம் என கூறப்படுகிறது.