பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, “பிரதமரின் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்தை ஒட்டுமொத்த நாடும் பார்த்துக் கொண்டு இருக்கிறது” என, விமர்சித்துள்ளார்.
கடந்த 2002 ஆம் ஆண்டில், குஜராத் மாநிலத்தில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து, பெரும் கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். கோத் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில், பில்கிஸ் பானு என்ற பெண், வன்முறை கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
அப்போது, 19 வயதான, பில்கிஸ் பானு, ஐந்து மாத கர்ப்பமாக இருந்தார். பில்கிஸ் பானுவின் குடும்பத்தினரும், இந்த கலவரத்தில் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த, மும்பை உயர் நீதிமன்றம், இரண்டு டாக்டர்கள், ஐந்து போலீசார் உட்பட, 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து, மேல் முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றம் குற்றவாளிகளுக்கான தண்டனையை உறுதி செய்தது.
இந்த நிலையில், ஆயுள் தண்டனை பெற்ற 11 பேரையும், குஜராத் மாநில அரசு நேற்று முன்தினம் விடுதலை செய்தது. இதற்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அவர் தெரிவித்து உள்ளதாவது:
5 மாத கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து 3 வயது சிறுமியைக் கொன்றவர்கள் ‘சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா’வின் போது விடுவிக்கப்பட்டனர். ‘பெண் சக்தி’ பற்றி பேசுபவர்களால் நாட்டு பெண்களுக்கு என்ன செய்தி கொடுக்கப்படுகிறது? பிரதமர் அவர்களே, உங்கள் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்தை ஒட்டுமொத்த நாடும் பார்த்துக் கொண்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் விமர்சித்து உள்ளார்.