சௌம்ய தாமோதரப்பெருமாள் கோவில், சென்னை வில்லிவாக்கத்தில் அமைந்துள்ளது.
திருமால் கிருஷ்ணராக அவதாரம் எடுத்தபோது, மிகவும் குறும்புத்தனம் மிக்க குழந்தையாக இருந்தார். அவரை தாயார் யசோதையால் கட்டுப்படுத்த முடியவில்லை. எவ்வளவு முயன்றும் கிருஷ்ணர், தாயாரை எப்படியாவது ஏமாற்றிவிட்டு வெளியில் விளையாடச் சென்றுவிடுவார். பொறுத்துப்பார்த்த யசோதை, ஒருசமயம் கிருஷ்ணர் வெளியில் செல்லாதபடி அவரது இடுப்பில் கயிறை சுற்றி, ஒரு உரலில் கட்டி வைத்துவிட்டார். ஆனாலும் கிருஷ்ணர் உரலையும் சேர்த்து இழுத்துச்சென்று இரண்டு அசுரர்களுக்கு விமோசனம் கொடுத்தார். இவ்வாறு யசோதை கட்டிவிட்ட கயிறு அழுத்தியதில் கிருஷ்ணரின் வயிற்றில் தழும்பு உண்டானது. எனவே இவர், “தாமோதரன்” என்ற பெயர் பெற்றார். “தாமம்” என்றால் கயிறு, “உதரம்” என்றால் வயிறு எனப்பொருள். இந்த நிகழ்வின் அடிப்படையில் இத்தலத்தில் தாமோதரனுக்கு கோவில் எழுப்பப்பட்டது. இவர் புன்னகை ததும்ப, அழகாக காட்சி தருவதால், “சௌம்ய தாமோதரர்” என்று அழைக்கப்படுகிறார்.
சித்திரையில் சுவாமி அவதார உற்ஸவம் நடக்கிறது. திருப்பதி தலத்தைப்போலவே இங்கும், சுவாமிக்கு வடக்கு திசையில் (குபேர மூலையில்) அமிர்தபுஷ்கரிணி தீர்த்தம் உள்ளது. ஆடி பவுர்ணமியில் கஜேந்திர மோட்ச விழா நடக்கிறது. அப்போது, சுவாமி கருட வாகனத்தில் தீர்த்தத்திற்கு எழுந்தருளி யானை, முதலைக்கு மோட்சம் கொடுக்கிறார். மகர சங்கராந்தியன்று (தைப்பொங்கல்) சுவாமி, ஸ்ரீவில்லிப்புத்தூர் இராஜமன்னார் அலங்காரத்தில் ஆண்டாளுடன் புறப்பாடாவது விசேஷம்.
தாயார் அமிர்தவல்லி, தனிச்சன்னதியில் இருக்கிறாள். மகாலட்சுமியின் அம்சமான இவள், பாற்டலில் தோன்றியவள் என்பதால் இப்பெயரில் அழைக்கப் படுகிறாள். தாருகாவனத்து ரிஷிகளின் கர்வத்தைப் போக்க திருமால், மோகினி அவதாரம் எடுத்தார். இதன் அடிப்படையில் பெருமாள் தலங்களில் திருவிழாவின்போது சுவாமி, மோகினி அலங்காரத்தில் காட்சி தருவார். ஆனால், இக்கோயிலில் தை மாதத்தில் நடக்கும் உற்சவத்தின் நான்காம் நாளில் தாயாருக்கு மோகினி அலங்காரம் செய்கின்றனர். இவ்விழாவின் போது இவள் கோவில் வளாகத்திலுள்ள நந்தவனத்திற்கு எழுந்தருளும் வைபவமும் நடக்கிறது. முதலாழ்வார்களின் ஜென்ம நட்சத்திர விழா 3 நாட்களும், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், இராமானுஜர், தேசிகர் ஆகியோரின் திருநட்சத்திர விழா 10 நாட்கள் நடப்பது விசேஷம்.
பெருமாள் நின்ற கோலத்தில் அருளுகிறார். விமானம் ஆனந்த விமானம் எனப்படுகிறது. 3 நிலை இராஜகோபுரத்துடன் கூடிய கோவில் பிரகாரத்தில் இராமர், கண்ணன், ஆண்டாள், ஆஞ்சநேயர், நம்மாழ்வார், இராமானுஜர் சன்னதிகள் உள்ளது. இத்தலத்தில் சுவாமியை குழந்தைக்கண்ணனாகவே பாவித்து வழிபடுகிறார்கள். மூலவர், உற்சவர் இருவரின் இடுப்பிலும் கயிறு அழுந்திய தடம் இருக்கிறது.
சௌம்ய தாமோதரரிடம் வேண்டிக்கொள்ள அறிவான குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.