புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு பணியில் இந்தோ திபெத் எல்லை போலீஸார் 37 பேர் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் சந்தன்வாரியில் இருந்து போலீஸ் வாகனத்தில் பஹல்காம் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, பஸ் பிரேக் செயல் இழந்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தில் உருண்டு ஆற்றில் விழுந்தது. இதில் இந்தோ திபெத் எல்லை போலீஸார் 6 பேரும், காஷ்மீர் போலீஸ்காரர் ஒருவரும் உயிரிழந்தனர். மற்றவர்கள் காயம் அடைந்தனர். மீட்புப் பணியில் எல்லை பாதுகாப்புப் படை ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டது. அதன் மூலம் காயம் அடைந்த வீரர்கள், ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படும் என இந்தோ திபெத் எல்லை போலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ராகுல் இரங்கல்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘‘ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் இந்தோ திபெத் எல்லை போலீஸார் சென்ற வாகனம் பள்ளத்தில் விழுந்த செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது. காயம் அடைந்த வீரர்கள் வீரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்’’ என கூறியுள்ளார்.