ஜம்மு காஷ்மீர் தலைவராக நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே ராஜினாமா செய்த குலாம் நபி ஆசாத்

ஸ்ரீநகர்: காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ஜம்மு காஷ்மீரின் தலைவராக நியமிக்கப்பட்ட சில மணிநேரத்திலேயே தனது பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் காங்கிரஸ் கமிட்டி செவ்வாய்க் கிழமையான நேற்று மாற்றியமைக்கப்பட்டது. இதில் மாநிலத்தின் தலைவராக குலாம் நபி ஆசாத் நியமிக்கப்பட்டார்.

ஆனால் உடல் நலக்கோளாறு காரணமாக இந்த பொறுப்பில் செயல்பட விரும்பவில்லையென ஆசாத் சில மணி நேரங்களிலேயே பொறுப்பை துறந்துள்ளார். இது கட்சி வட்டாரத்தில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019ல் ஆகஸ்ட் மாதத்தில் ஜம்மு-காஷ்மீரின் தனிச்சிறப்பு அந்தஸ்தான 370வது சட்டப்பிரிவை மத்திய அரசு அதிரடியாக நீக்கியது. இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் பாஜகவின் இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்த்தனர். இந்நிலையில் அம்மாநிலத்தில் கட்சியை பலப்படுத்த பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே தங்களுக்கு இருக்கும் பலத்தை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் தனது பிரச்சார குழுவினை மாற்றியமைக்க முடிவெடுத்தது.

இதன்படி செவ்வாய்க் கிழமையான நேற்று நடந்த இந்த மாற்றங்களில் கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் ஜம்மு-காஷ்மீரின் பிரச்சாரக் குழுவின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டார். ஆனால் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே ஆசாத் “தன்னால் இந்த பொறுப்பில் செயல்பட முடியாது” என கூறி பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டார். இது அக்கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ராஜினாமாவிற்கு ஆசாத் தனது உடல் நலத்தை காரணமாக கூறியுள்ளார்.

இந்த புதிய பிரச்சாரக் குழுவின் துணைத் தலைவராக தாரிக் ஹமீத் கர்ராவும், கன்வீனராக ஜி எம் சரூரியும் நியமிக்கப்பட்டனர். இதனையடுத்து ஆசாத் ராஜினாமா செய்த நிலையில், அவருடைய ராஜினாமா கடிதத்தை கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி ஏற்றுக்கொண்டு, ‘விகார் ரசூல் வானி’ ஜம்முவின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜம்முவில் கட்சி வீரியத்துடன் செயல்பட வேண்டுமென சோனியா செவ்வாய்க் கிழமை சில அதிரடி முடிவுகளை அறிவித்தார்.

அதன்படி, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் தலைவர் மற்றும் செயல் தலைவர், பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் பிரச்சாரக் குழு, அரசியல் விவகாரக் குழு, ஒருங்கிணைப்புக் குழு, தேர்தல் அறிக்கைக் குழு, விளம்பரம் மற்றும் வெளியீட்டுக் குழு, ஒழுங்குக் குழு மற்றும் பிரதேச தேர்தல் குழு ஆகிய குழுக்களை மறு கட்டமைப்பு செய்து இதன் பொறுப்பாளர்களை மாற்றப்பட்டனர். தற்போது இந்த யூனியன் பிரதேசத்தின் கட்சி தலைவராக ரசூல் வானி நியமிக்கப்பட்டாலும், கட்சியின் செயல் தலைவராக ராமன் பல்லா நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய அரசியலிலிருந்து மீண்டும் மாநில அரசியலுக்கு பயணிக்க விருப்பமில்லாததன் காரணமாகவே ஆசாத் ராஜினாமா செய்ததாக சொல்லப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.