டெல்லியில் நரேந்திர மோதி – மு.க. ஸ்டாலின் சந்திப்பில் நடந்தது என்ன?

What happened in PM Modi Cm Stalin Delhi meet

BBC

What happened in PM Modi Cm Stalin Delhi meet

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று டெல்லியில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மூ, குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்துப் பேசியதுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோதியையும் சந்தித்துப் பேசியிருக்கிறார். இதில் பிரதமர் மோதியுடனான சந்திப்புதான் தமிழக அரசியலில் உற்று கவனிக்கப்படும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. முதல்வரின் டெல்லி விஜயத்துக்கு நிஜமான காரணம் என்ன?

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று டெல்லி சென்றுள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ஆகியோரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் நரேந்திர மோதியையும் சந்தித்துப் பேசவிருக்கிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் டெல்லிக்குச் சென்று பிரதமரைச் சந்திக்கவிருக்கிறார் என்ற செய்தி வெளியானதுமே, பாரதிய ஜனதா கட்சியுடன் திமுக நெருக்கம் காட்டுகிறதா என்ற கேள்விகள் மறுபடியும் எழ ஆரம்பித்தன.

இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்த செஸ் ஒலிம்பியாடின் துவக்க விழாவில் பிரதமர் மோதிக்கும் முதலமைச்சருக்கும் இடையில் வெளிப்படையாகத் தெரிந்த நல்லுணர்வு சமிக்ஞைகள், அந்தத் தருணத்திலேயே பாஜகவுடன் திமுக நெருங்குகிறதா என்ற கேள்விகளை எழுப்பின.

சொல்லி வைத்ததுபோல தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அந்த விழாவைப் புறக்கணித்தது.

இந்த நிலையில்தான் முதல்வரின் இந்த டெல்லி விஜயமும் கவனிப்பிற்கு உள்ளானது. ஆனால், திமுக – பாஜகவுடன் நெருக்கம் காட்டுகிறதா என்ற கேள்விக்கு முந்தைய நாளே பதில் சொன்னார் முதலமைச்சர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட மு.க. ஸ்டாலின், ”பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆகிய அமைப்புகளிடம் குறைந்தபட்ச சமரசத்தை திமுக கையாண்டால் கூட, தி.மு.க. அணியில் பா.ஜ.க. எதிர்ப்பு என்பது மெல்ல மெல்ல நீர்த்துப் போய்விடும் என்று திருமா அதில் சொல்லியிருக்கிறார்.

குடியரசு துணைத் தலைவர் தன்கருடன் ஸ்டாலின்

BBC

குடியரசு துணைத் தலைவர் தன்கருடன் ஸ்டாலின்

டெல்லிக்கு காவடி தூக்கவில்லை

ஆனால், “திமுகவை பொறுத்தவரை தனது கொள்கையில் எப்போதுமே உறுதியாக இருக்கும். நான் இப்போது இரு பொறுப்புகளில் அமர்ந்திருக்கிறேன், திருமா அவர்களுக்குத் தெரியும், எல்லோருக்கும் தெரியும், உங்கள் அத்தனை பேருக்கும் தெரியும், ஒன்று கட்சித் தலைவர் பொறுப்பு, இன்னொன்று அனைவருக்குமான தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பு. உங்களால் உருவாக்கப்பட்டவன்தான் நான்; உங்களால் உட்கார்ந்திருக்கக்கூடியவன் நான்.”

“நான் என்ன காவடியா தூக்கப் போகிறேன். கை கட்டி, வாய் பொத்தி, உத்தரவு என்ன என்றா கேட்கப் போகிறேன்? தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில், ஒன்றிய அரசிடம் பேசி, தமிழகத்திற்கு, தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான திட்டங்களைப் பெறவேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. ஆகவே ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையில் உறவு இருக்கிறதே தவிர, தி.மு.க.விற்கும், பா.ஜ.க.விற்கும் அல்ல! தி.மு.க.வினுடைய கொள்கைக்கும், பா.ஜ.க.வினுடைய கொள்கைக்கும் எந்த உறவும் கிடையாது.” என்று ஸ்டாலின் குறிப்பிட்டார்.

திமுக பாஜக

BBC

திமுக பாஜக

புதன்கிழமையன்று டெல்லி சென்று குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர் ஆகியோரைச் சந்தித்த முதலமைச்சர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “நீட் பிரச்னை, புதிய கல்விக் கொள்கை, மின்சாரம், காவேரி பிரச்னை, மேகதாது பிரச்னை போன்ற பல கோரிக்கைகளை தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கிறோம். அதையெல்லாம் மீண்டும் நினைவுபடுத்துவோம்,” என்று தெரிவித்தார்.

https://twitter.com/mkstalin/status/1559801855634391040

ஆனால், சமூக வலைதளங்களில் முதல்வரின் தலைநகர விஜயத்திற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டு விவாதங்கள் நடந்து வருகின்றன. சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்த வருமான வரித் துறை சோதனை, அமலாக்கப் பிரிவு சோதனைகளின் பின்னணியிலும் முதல்வரின் டெல்லி பயணம் பார்க்கப்படுகிறது.

ஸ்டாலினுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கிய பிரதமர்

ஆனால், அப்படியிருக்க வாய்ப்பில்லை என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.

“இது பெரும்பாலும் தமிழக அரசுக்கு நிதி கேட்பது, மசோதாக்களை நிறைவேற்றித் தருவது என்பது தொடர்பாகவே இருக்கக்கூடும். பா.ஜ.கவை அணுகி, முதல்வர் தனிப்பட்ட ரீதியான விஷயங்களை முன்வைத்தால், அதற்கு பதிலாக பா.ஜ.க. எதிர்பார்ப்பதை தி.மு.கவால் செய்ய முடியாது. காரணம், தி.மு.கவின் வாக்கு வங்கி என்பது பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளே. திமுக பா.ஜ.கவுடன் நெருங்கும்பட்சத்தில், அந்த வாக்குகளை இழக்கக்கூடும். இதையெல்லாம் முதல்வர் உணர்ந்தேதான் இருக்கிறார். அதனால்தான் திருமாவின் விழாவில் அப்படி பேசினார்.

திமுகவும் பாஜகவும் நெருங்கி வருகின்றன என்று பேசுபவர்களுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது. அது தி.மு.கவின் வாக்கு வங்கியில் ஓட்டைபோடுவது. மற்றபடி இந்த டெல்லி பயணத்தில் திமுக – பாஜக இடையே ஏதும் நடப்பதற்கு வாய்ப்பில்லை” என்கிறார் ப்ரியன்.

இந்த முறை பிரதமர் அலுவலகத்தில், முதல்வர் எந்த நேரம் கேட்கிறாரோ அந்த நேரத்தைக் கொடுக்கும்படி சொல்லப்பட்டிருந்ததாகவும் அதன்படியே மாலை நான்கு மணிக்கு மேல் நேரம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தவிர, பாஜக – திமுக நெருக்கம் குறித்த பேச்சுகள் அடிபடும் நிலையில், இந்த சந்திப்பை அரசியல் சந்திப்பாக அல்லாமல் அரசு ரீதியான சந்திப்பாக வைக்கவே முதல்வர் முனைப்போடு இருக்கிறார்.

அதனால், பிரமருடனான சந்திப்பின்போது முதலமைச்சருடன் தலைமைச் செயலர் இறையன்பு மட்டுமே உடனிருப்பார் என்று தெரிகிறது. அந்த சந்திப்பு முடிந்த பிறகு பிரதமரும் முதலமைச்சரும் தனித்துப் பேசியதாக தெரிய வந்துள்ளது. அதன் விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

https://www.youtube.com/watch?v=o6nhB7FRkd4

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil


Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.