வி.சி.க சார்பில் 2022-ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழாவில், ‘அம்பேத்கர் சுடர்’ விருது பெற்ற கர்நாடக முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசும் போது, “அரசின் சொத்துக்களை பா.ஜ.க தொடர்ந்து தனியார்மயமாக்கி வருகிறது. இதற்கு காரணம் தனியார் மயமாக்கிவிட்டால் இட ஒதுக்கீடு வழங்காமல் இருந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். நாம் தனியார் வேலையிலும் இடஒதுக்கீடு கேட்க வேண்டும். அப்படி கேட்பது ஒன்றும் அரசியல் சட்டத்திற்கு எதிரானது அல்ல” என்றார்.
தனியார்மயம் இந்தியச் சந்தையில் கலந்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அந்நிய மற்றும் தனியார் முதலீடுகளுக்கு சந்தையைத் திறந்ததிலிருந்து, இந்தியப் பொருளாதாரம் அரசு மற்றும் தனியார் துறைகளின் கலவையில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. அரசுத் துறைகளைக் கீழே தள்ளி தனியார் துறைகளின் வீச்சு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. தற்போது சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மக்களின் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு, வருமானம் என அனைத்திலும் மிகப்பெரிய நிலையற்ற தன்மையை உண்டாக்கியிருக்கிறது. இந்தச் சூழலில் பொருளாதார வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. இது போன்ற ஒரு சூழலில் தான் இந்தியா போன்ற நாட்டில் தனியார் துறைகளிலும் ‘இட ஒதுக்கீடு வேண்டும்’ என்கிற குரல் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது.
“இட ஒதுக்கீடு என்பது அரசமைப்புச் சட்டம் உத்தரவாதமாக வழங்கியுள்ள சமவாய்ப்புக்களை உறுதிசெய்ய அவசியமான கருவி. அது சட்டமன்றம், நாடாளுமன்றம், அரசு, கல்வி பணியில் மட்டும்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சமூகத்தின் எல்லா அமைப்புகளிலும் உரிய வாய்ப்பு அளிப்பது மட்டுமே சமூகநீதி. அரசமைப்பு சட்டத்தில் சரத்து 15 (4) 100% தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு என்பதை முக்கியத்துவம் கொடுத்து சொல்லாமல், எல்லாத் துறைகளிலும் போதுமான அளவிற்கு எல்லோருக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் என்கிறது” என்கிறார் BC/MBC/DNT சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராமசாமி.
“இட ஒதுக்கீட்டால் முற்பட்ட வகுப்பில் இருக்கும் திறமை மிகுந்த பலருக்கு வேலை கிடைப்பதில்லை என்ற பொய் பிம்பம் கட்டமைக்கப்படுகின்றது” என்கிறவர், “திறமை என்ற பெயரில் தனியார் துறையிலும் மிக குறைவான வாய்ப்புக்களே தாழ்த்தப்பட்ட பழங்குடி, பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு வழங்கப்படுகிறது. 1953-ல் போடப்பட்ட காக்கா கலேல்கர் ஆணையம் முதலே தனியார் துறையில் பிற்படுத்தபட்டவகுப்பின் பங்கும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் இன்று வரை அது உரிய கவனம் பெறவில்லை” என்கிறார்.
மேலும் தொடர்ந்தவர், “2016-ல் NCBC தனியார் துறையில் ஓ.பி.சி-க்கு 27% இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்துள்ளது. 2019-ல் ஆந்திர அரசும், 2020-ல் ஹரியான அரசு உள்ளூர்வாசிகளுக்கு தனியார் துறையில் 75% இட ஒதுக்கீடு வழங்கச் சட்டம் இயற்றியுள்ளது. உயர் நீதிமன்றம் வழங்கிய தடைகளை உச்ச நீதிமன்றம் நீக்கி அச்சட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. ஆனால், அது வகுப்புவாரி தனியார் இட ஒதுக்கீடு அல்ல வசிப்பிட தனியார் இட ஒதுக்கீடு” என்றவர், “இந்தியாவில் மட்டும் இட ஒதுக்கீடு முறை இல்லை மேலை நாடுகளிலும் இருக்கிறது” என்கிறார்.
“அமெரிக்கா, ஜெர்மன், பிரான்ஸ், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அங்கு சாதி வாரியாக இல்லாமல் இன வரியாக அளிக்கப்படுகிறது. இந்த இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றாத இந்திய நாட்டு பெறு நிறுவனங்கள், மேலை நாடுகளில் உள்ள இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புக் கொண்டே வேலை கொடுக்கிறார்கள். ஏனெனில் அங்கு இட ஒதுக்கீடு தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது. அவ்வாறு வெளி நாடுகளில் ஏற்றுக்கொள்பவர்கள் ஏன் உள்நாட்டில் ஏற்றுக் கொள்வதில்லை?” என்கிற கேள்வியை முன் வைக்கும் ராமசாமி,
“சுருங்கி வரும் அரசுத்துறை பணிகளாலும் விரிந்து வரும் தனியார் துறைகளிலும் பலவிதமான வினோதமான சமூக கட்டமைப்புக்களால் விசித்திரமான கண்ணுக்குத் தெரியாத காரணிகளால் முற்பட்ட வகுப்பினரே தனியார் துறையும் ஆக்கிரமித்துள்ளனர். எனவே அனைத்து சமூகங்களுக்கும் அனைத்துத் துறைகளிலும் உரிய வாய்ப்பளித்தால் மட்டுமே சமதர்ம சமத்துவ சமுதாயத்தைப் படைக்கும் அரசமைப்புச் சட்ட இலட்சியத்தை அடைய முடியும். எனவே தனியார் துறையிலும் சரி, அரசுத் துறையிலும் சரி இட ஒதுக்கீடு மூலம் நிரப்புவதற்கான வழி சொல்வதோடு, தனியார் துறையில் வேலைவாய்ப்பினை முறைப்படுத்த வேண்டும். தனியார் துறையில் வெளிநாட்டு உள்நாட்டுக் கொள்கை ஒன்றாக இருக்க வேண்டும். தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு கேட்பது தவறில்லை என மக்கள் உணர முன் வர வேண்டும்” என்கிறார்.
“இன்றைய சூழலில் தனியார் துறையில் இட ஒதுக்கீடு சாத்தியமில்லை என்பது தான் எதார்த்தம்” என்கிறார் அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன்.
“ஒரு இடத்தில் முதலீடு ஈர்க்க வேண்டும் என்றால் அதற்கு முதலீடு செய்பவர்களுக்கு அந்த இடத்தில் சில சுதந்திரங்கள் கொடுக்க வேண்டும். அந்நிறுவனங்கள் யாரை எடுக்க வேண்டும் என்பது அரசாங்கம் நிர்ணயித்தால், வேறு இடங்களுக்கு மாறுவார்கள். அரசுப் பணிகள் மற்றும் அரசு அமைப்புகளில் இட ஒதுக்கீடு இருக்க வேண்டும். அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், அதைத் தனியாருக்கு கொண்டு வருவதில் சாத்தியமா என்பதும் அரசியல் சாசன சட்டப்படி மதிப்புமிக்கதாக இருக்குமா என்பதும் யோசிக்க வேண்டும்.
சில மாநிலங்களில், அந்தந்த மாநிலத்தவருக்கு தனியார் துறைகளில் 70% வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால், உண்மை நிலைமை, தனியார் துறை நிறுவனங்களும் அதைக் கண்டு கொள்வதில்லை. அரசும் அதைப் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. இன்னும் சொல்லப் போனால் யாரும் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஏனென்றால் ஒரு நான்கைந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் போது அந்த நிறுவனங்கள் அங்கிருந்து வேறு இடம் மாற ஆரம்பிப்பார்கள். இதனால் இழப்பு ஏற்படுவது தான் மிச்சம். வேலை வாய்ப்புகளும் கேள்விக்குறியாகும் என்பதுதான் நிதர்சனம்” என்கிறார்.
தனியார் துறையில் இட ஒதுக்கீடு சாத்தியமா? இது குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? என்று விளக்கம் கேட்கத் தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசனை தொடர்பு கொண்டோம். அவர், “முதல்வரை சந்திக்கும் போது, இது குறித்து ஆலோசித்து விட்டு விளக்கம் தருகிறேன்” என முடித்துவிட்டார்.