தருமபுரி: தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்தில் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்ற மறுத்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மனு அளித்தனர்.
நல்லம்பள்ளி ஒன்றியம் பேடர அள்ளி ஊராட்சியைச் சேர்ந்த கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். அதில், “பேடர அள்ளியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக தமிழ்ச்செல்வி என்பவர் பணியாற்றுகிறார். ஆகஸ்ட் 15-ம் தேதி இப்பள்ளியில் சுதந்திர தின விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் என்ற முறையில் இந்த விழாவில் அவர் தான் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்திருக்க வேண்டும். ஆனால், அவர் தேசியக் கொடியை ஏற்றவும், வணங்கவும் மறுத்தார்.
கிறித்தவ மதத்தில் ஒரு பிரிவை தான் பின்பற்றுவதாகவும், அதன் வழக்கப்படி தமது கடவுளைத் தவிர வேறு யாரையும் வணங்க மாட்டேன். அதனாலேயே தேசியக் கொடியை ஏற்றுவதில்லை என்று காரணம் கூறியுள்ளார்.
இதனால், அன்று மற்றொரு ஆசிரியரால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தேசியக் கொடியை ஏற்றவும், வணங்கவும் மறுத்த தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வியின் செயலை கிராம மக்கள் கண்டிக்கிறோம். தேச அவமதிப்பு செயலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கேட்டபோது, “பேடர அள்ளி பள்ளியில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்கு பின்னரே நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளனர்.