தவுசன்ட் வாலா, ஜிலேபி பாக்ஸ் டண்டணக்கா ஆன கதையை சொல்கிறார் wiki: யானந்தா

‘‘அதிரடி தீர்ப்பை கேட்டு எடப்பாடி கோஷ்டி அதிர்ந்து போயிருக்காமே…’’ என சிரித்தார் பீட்டர் மாமா.
 ‘‘வெற்றிக் கனியையே ருசித்துக்கொண்டிந்த மாங்கனியாரின் ஆதரவாளர்கள் ஒரே ஒரு தீர்ப்பில் மனசொடிஞ்சு போயிட்டாங்களாம். தமிழகத்தின் முதல்வராகி  மாங்கனி மாநகருக்கு பெருமை சேர்த்ததோடு மட்டுமல்லாமல் இலைக்கட்சியின் இடைக்கால பொ.செ.ஆகி மணிமகுடம் சூட்டினாருன்னு அவரது அடிப்பொடிகள் வெற்றி களிப்பில் இருந்தாங்க. அதேபோல பொதுக்குழு தொடர்பான கேசிலும் வெற்றி நமக்குத்தான்னு இருந்தாங்க. இதற்காக டென் தவுசன்ட் வாலாவை வாங்கி மாங்கனி நகரை அதிரவைக்க திட்டமும் போட்டிருந்தாங்க. அதோடு மட்டுமல்லாமல் பப்ளிக்குக்கு கொடுக்க லட்டு, ஜிலேபி என பாக்ஸ் பாக்ஸா ரெடியா வச்சிருந்தாங்க. விழாவை பிரமாண்டமாக கொண்டாட அனைத்து நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவிச்சிருந்த மாங்கனி மாவட்ட செயலாளரு மணிமண்டபத்திற்கு வந்திடனும்னும் உத்தரவு போட்டிருந்தாரு. அதன்படியே நிர்வாகிகளும் ரெடியா இருந்தாங்க. அப்பதான் மாங்கனியாரின் இடைக்கால பொ.செ.பதவி செல்லாதுங்குற இடிபோன்ற செய்தி அனைவருக்கும் வந்து சேர்ந்ததாம். இதனை கேட்டதும் அனைவரும் நொறுங்கியே போயிட்டாங்களாம். வாங்கிய வெடிய கூட நெக்ஸ்ட் டைம் வெடிச்சுக்கலாம். ஆனா வாங்கிய லட்டை என்ன செய்யன்னு அப்பாவி தொண்டர்கள் கொஸ்டீன் எழுப்பியிருக்காங்க. இதனால ஷாக்கான மாவட்டம், ஏற்கனவே வந்தசெய்தி நல்லாயில்ல, பாக்ஸை வெளியே எடுத்து அண்ணனின் கோபத்திற்கு ஆளாக்க பாக்குறீங்களா என்று டென்சனாயிட்டாராம். இதனால வந்த ஜிலேபி பாக்ஸ் எல்லாம் காணாமபோயிருச்சாம். அதே நேரத்துல தேனிக்காரரின் ஆதரவாளர்கள் ஒண்ணா கூடி வெடிய வெடிச்சிட்டு போனாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

 ‘‘தாமரை தலைவர் முகம் வாடியதின் காரணம் என்னவாம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
 ‘‘வடமாநில  நதி பெயரில் முடியும் மாவட்டத்தின் எம்பி தொகுதியை குறிவைத்து தாமரை தலைமை  காய் நகர்த்தி வருகிறது. இதற்காக மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த  அக்கட்சியின் மாநிலத்தலைவருக்கு கட்சியினர் சார்பில் வரவேற்பு  அளிக்கப்பட்டது. ஆனால் பொதுமக்கள் மத்தியில் எவ்வித தாக்கமும் இல்லையாம்.  முன்பெல்லாம் தாமரைக்கட்சியின் நிகழ்ச்சிக்கு இலைக்கட்சியினரும் அழைத்து  வரப்படுவர். இப்போது இலைக்கட்சியில் நடக்கும் குளறுபடிகளை பயன்படுத்தி,  தாமரைக்கட்சியினர் அடிக்கும் அட்ராசிட்டிக்கு அளவே இல்லாமல் போவது  இலைக்கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் கடும் அதிருப்தியை  ஏற்படுத்தியுள்ளதாம். இதனால் இலைக்கட்சியினரும் தாமரைக்காரர்களின்   நிகழ்ச்சிகளை புறக்கணிக்கத் துவங்கி இருக்கின்றனர். இதனால்,  தாமரைக்கட்சியின் மாநிலத்தலைவர் வந்தபோது, கூட்டத்தைக் கூட்டிக் காட்ட  முடியாமல் நிர்வாகிகள் விழி பிதுங்கி விட்டனர். இந்த அப்செட்டில் இருந்த  மாநிலத்தலைவருக்கு அவர் இப்பகுதியில் சுற்றுப்பயணத்தில் இருந்தபோதே,  இக்கட்சியில் இருந்து விலகுவதாக ‘தூங்கா நகர்’ மாவட்டத்தலைவர் அறிவித்தது  மேலும் அதிர்ச்சியை அளித்ததாம். இதனால் சுற்றுப்பயணம் முழுக்க  மாநிலத்தலைவரின் முகம் களையிழந்து கடுகடுப்புடனேயே இருந்ததைக்  கண்ட  நிர்வாகிகள் அத்தனை நிகழ்ச்சிகளையும் விரைந்து முடித்து அனுப்பி  வைத்தார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

  ‘‘போதைக்கு உடந்தையாக உள்ள காக்கி கருப்பு ஆடுகள் வசமாக சிக்கியிருக்காமே…’’ என்றார் பீட்டர் மாமா.
 ‘‘தமிழகத்தில்  போதை பொருட்களை முற்றிலுமாக தடுக்க காவல்துறை முழுமையான நடவடிக்கை  மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டார். டிஜிபியும் இதுதொடர்பாக  காவல்துறையினருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார். ஆந்திரா, கர்நாடக  மாநிலங்களிலிருந்து வெயிலூர் மாவட்டத்தின் வழியாக போதை பொருட்கள் அதிகளவில்  கடத்தி வரப்படுகிறது. வெயிலூரில் சந்தேகத்திற்கு இடம் அளிக்காத வகையில்  குடோன்களை வைத்து போதை பொருட்களை பெட்டி கடைகளுக்கு சப்ளை செய்து  வருகிறனர். இதில் கோடிக்கணக்கில் வருமானம் புரள்கிறது.  இதை தடுக்க  ஏற்கனவே காவல்துறையினர் ரெய்டு நடத்தி பறிமுதல் செய்தும் கைது செய்தும்  வந்தனர். இருப்பினும் இவை அனைத்தும் பெயரளவுக்கு மட்டுமே இருந்ததது. இதற்கு  வெயிலூரில் பணிபுரிந்த காக்கி உயர் அதிகாரி சரிவர கண்காணிக்காமல்,  கடத்தலுக்கு துணைபோனதாக அவர் மீது குற்றச்சாட்டு சென்றது. உடனடியாக தமிழக  அரசு அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றம் செய்தது. இதனால்  மற்ற உயர் காக்கிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். போதை பொருட்களுக்கு  உடந்தையாக உள்ள சில காக்கி கருப்பு ஆடுகள் தங்கள் மீது எப்போது நடவடிக்கை  எடுப்பார்களோ என கதி கலங்கி உள்ளனர். தற்போது உயர் பதவியில் உள்ள சில  காக்கிகளை உளவுத்துறையினர் ரகசியமாக கண்காணித்து வர்றாங்களாம்’’ என்றார்  விக்கியானந்தா.

‘‘அதிகாரியின் அதிரடியால் ஆடிப்போயுள்ளார்களாமே..’’
‘‘போக்குவரத்து ஆணையராக நிர்மல்ராஜ் பதவி ஏற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தாம்பரத்தில் ஆவணங்கள் காணாமல் போனது குறித்து தகவல் கிடைத்ததும், நேரடியாக சென்று விசாரித்து 5 பேரை சஸ்பெண்ட் செய்தார். இதுபோல உள்ள புகார்களை எல்லாம் அவர் தூசி தட்டி எடுத்துள்ளாராம். விரைவில் பல அதிரடிகளை நிகழ்த்த உள்ளாராம். இதனால் போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிர்ச்சியில் உள்ளார்களாம். இவர், கனிம வளத்துறையில் இயக்குநராக இருந்தபோது குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தாராம். குறிப்பாக நெல்லை, தென்காசி குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தாராம். இது லஞ்ச அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ெகாடுத்துள்ளதாம்’’ என்றார் விக்கியானந்தா.

 ‘‘தமிழக மாவட்ட எஸ்பிக்கள், கலெக்டர்கள் விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக பேச்சு அடிபடுகிறதே..’’ என்றார் பீட்டர் மாமா.
 ‘‘உண்மைதான்.. தவறு செய்கிறவர்களுக்கு நான் சர்வாதிகாரியாக இருப்பேன் என்று முதல்வர் எச்சரித்திருந்தார். அதன் எதிரொலிதான் வேலூர் பெண் டிஐஜி ஆனி விஜயா அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார். இப்போது மாவட்ட வாரியாக அதிகாரிகளின் பணி விவரங்கள் அலசப்பட்டு வருகிறதாம். விரைவில் அதிரடி இருக்கும் என்கின்றனர் கோட்டை வட்டார அதிகாரிகள்’’ என்றார் விக்கியானந்தா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.