`திருச்சிற்றம்பலம்’ ரிலீஸ் பரபரப்பில் இருக்கிறார் இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர். தனுஷின் `யாரடி நீ மோகினி’, `குட்டி’, `உத்தமபுத்திரன்’ படங்களை அடுத்து நான்காவது முறையாக `திருச்சிற்றம்பலம்’ படத்தில் கைகோத்திருக்கிறார் அவர். ரிலீஸ் டென்ஷனை ஓரங்கட்டி வைத்துவிட்டு, நம்மிடம் சில நிமிடங்கள் பேசினார்.
தனுஷோட மட்டுமே தொடர்ந்து பயணிக்கிறீங்களே?
“‘கர்ணன்’ படப்பிடிப்பின் போது, தனுஷ் சார்கிட்ட இந்தக் கதையை அவர்கிட்ட சொன்னேன். நாங்க பேசிப்பேசி முழுக்கதையாச்சு. பலரும் என்கிட்ட “தனுஷ் உங்களுக்கு மட்டும் எப்படித் தொடர்ந்து படம் கொடுத்துட்டிருக்கார்?”ன்னு கேட்பாங்க. உண்மையிலேயே எனக்கும் அது ஆச்சரியம்தான். நான் செல்வராகவன் சார்கிட்ட ஒர்க் பண்ணப்ப இருந்து தனுஷைத் தெரியும். ஆனாலும் நான் அவருக்காகன்னு ஒரு கதை சொன்னதே இல்ல. அவரும் என்கிட்ட ‘எனக்காக ஒரு கதை’ன்னு கேட்டதில்லை. இதுவரை பண்ணின படங்கள் அத்தனையுமே தானாகவே அமைஞ்சதுதான். என்னோட படங்கள் எல்லாமே குடும்பத்தோடு பார்க்கக்கூடியவையா இருக்கும். ‘யாரடி நீ மோகினி’ படம் தனுஷ் சாருக்கு ஃபேமிலி ஆடியன்ஸைக் கொடுத்துச்சு. இப்ப, ‘திருச்சிற்றம்பலம்’ மீண்டும் அப்படியொரு படமா வந்திருக்கு.”
படத்துல ஏகப்பட்ட திறமைவாய்ந்த நடிகர், நடிகைகள். எல்லாருக்கும் சரியான முக்கியத்துவம் இருக்குமா?
“இந்தக் கதையில் பேரன், அப்பா, தாத்தான்னு மூணு தலைமுறை கதாபாத்திரங்களும் வலுவா இருக்கும். அதனாலேயே பாரதிராஜா, பிரகாஷ்ராஜ்ன்னு கதையில தேர்ந்த நடிகர்கள் இருக்காங்க. இதுல நித்யா மேனனையும் சேர்த்துக்கலாம். நாலு பேருமே நாலு தூண்கள். தனுஷுக்கு சமமா நித்யாமேனன் கேரக்டரும் இருக்கும். இவங்க இல்லாம ராஷி கண்ணாவும், பிரியாபவானி சங்கரும் இருக்காங்க.”
மீண்டும் தனுஷ் – அனிருத் காம்போ! தனுஷே 3 பாடல்கள் எழுதிருக்காரே…
“எனக்கு ‘போயட்டு’ தனுஷை ரொம்பப் பிடிக்கும். ஏன்னா, எழுதுறது கஷ்டமானது. ‘கொலைவெறி’ பாடல் ஒரு ரகம்னா, ‘மயக்கம் என்ன’ல ‘பிறை தேடும்…’ பாடல் ரம்மியமான ரகம். தனுஷ் – அனிருத் கூட்டணி இதுல அமைஞ்சிருக்கறது சந்தோஷமா இருக்கு. அனிருத்தும் அவரும் அவ்ளோ அழகா ஒர்க் பண்ணினாங்க. தனுஷ் சார் எழுத ஆரம்பிச்சாலே, வரிகள் சரளமா வந்து விழுந்தன.”
முழுப் படத்தையும் தனுஷ் பார்த்துட்டாரா? என்ன சொன்னாரு?
“மிக்ஸிங் ஒர்க்கின் போதே என்கூட தனுஷ் சாரும் இருந்தார். முழுப்படத்தையும் அவர் அப்பவே பார்த்துட்டார். பொதுவா அவரோட எந்தப் படத்தைப் பார்த்தாலும், நல்லா இருக்கு, இல்லைன்னு சட்டுன்னு எல்லாம் சொல்லிட மாட்டார். அப்படி அவர் எதுவும் சொல்லலைன்னாலும் அவரோட ரியாக்ஷன்கள் வெச்சு புரிஞ்சிக்கலாம். இங்க நான் அப்படிப் பார்த்துப் புரிஞ்சுகிட்டேன். படம் அவருக்குத் திருப்தி. அந்தத் திருப்தி படம் பார்க்கறவங்களுக்கும் கிடைக்கும்!”