சென்னை : விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ள அதிதி ஷங்கர், தனது அப்பாவுக்கு மிகவும் உணர்வுபூர்வமாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அவரது ரசிகர்கள் முதல், திரைப்பிரபலங்கள் வரை பலரும் ஷங்கருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஷங்கர் சினிமாவில் நுழைந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இவருடைய படங்கள் எல்லாமே தொழில்நுட்ப நுண்ணறிவும், பிரம்மாண்டம், அதிரடியான சமூக மாற்றம், மக்களிடம் விழிப்புணர்வு கொண்ட படங்களாகவே இருக்கும்.
இயக்குநர் ஷங்கர்
ஷங்கர் 1993ம் ஆண்டு ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். வித்தியாசமான கதையை கையில் எடுத்து முதல் படத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார் ஷங்கர். முதல் படத்தில் கிடைத்த ஆராவாரமும் அடுத்தடுத்து படங்களிலும் கிடைத்ததால் உச்சபட்ட இயக்குநர் என பெயர் எடுத்தார்.

ஹாலிவுட் தரத்திற்கு
ஷங்கர் கை வைத்தால் தொட்டது எல்லாம் துலங்கும் என்பது போல இவருடைய அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. இதுவரை 13 படங்களை ஷங்கர் இயக்கி இருக்கிறார். அவற்றில் ஒரு சில படங்கள் மட்டுமே வணிகரீதியாகத் தோல்வி அடைந்தன. ஹாலிவுட் பட தரத்திற்கு இணையாக பல தொழில் நுட்பங்களை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்து, தமிழ் சினிமாவை பலப்படுத்தியதில் இயக்குனர் ஷங்கரிற்கு மிகப்பெரிய பங்கு உண்டு.

ராம்சரணை வைத்து
ஷங்கர் தற்போது தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக RC15 என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தை அடுத்து அடுத்ததாக நின்றுபோன இந்தியன் 2 திரைப்பட இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

நன்றி ஷங்கர் சார்
இந்நிலையில், இன்று பிறந்த நாளை கொண்டாடி வரும் ஷங்கருக்கு, அவரது மகள் அதிதி தனது ட்விட்டர் பக்கத்தில் உணர்வுபூர்வமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், என் வாழ்க்கையில் சினிமாவை கொண்டு வந்த இந்த மனிதருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். பான் இந்திய திரைப்படங்களின் முன்னோடி நீங்கள் தான். திரையில் கற்பனையை உயிர்ப்பிக்கும் விதம் மெய்சிலிர்க்க வைக்கும். ஒவ்வொரு நாளும் என்னை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி ஷங்கர் சார். ஆனால் எப்போதும் என்னுடன் இருப்பதற்கு நன்றி அப்பா, ஐ லவ் யூ என்று அதிதி தனது அப்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.