நல்ல திரைப்படங்களை நாம் கொடுத்தால் மக்கள் தானாக திரையரங்குகளுக்கு வருவார்கள் என்று நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் அண்மை காலமாக திரையரங்குக்கு வரும் படங்கள் பிளாப் படமாகிக் கொண்டு இருக்கிறது. முன்னணி நடிகரான அமீர் கான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ‘லால் சிங் சத்தா’ பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடி வசூலை எட்ட முடியாமல் திணறி வருகிறது. அதேபோல அண்மையில் வெளியான ரன்பீர் கபூரின் ‘சம்ஷேரா’, அக்சய் குமாரின் ‘ரக்ஷா பந்தன்’ ஆகியவையும் படுதோல்வியை சந்தித்தது. இதனால் பாலிவுட் திரையுலகம் அசிர்ச்சியில் இருக்கிறது.
நடிகர் மாதவன் நடித்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் ‘Dhokha: Round D Corner’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர் “நல்ல திரைப்படங்களை நாம் வெளியிட்டால், இயல்பாகவே சினிமா ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுக்க தொடங்கி விடுவார்கள்” என்றார். அண்மையில் தென் இந்தியப் படங்கள் பாலிவுட்டில் சக்கப்போடு போட்டது குறித்து கேட்டகப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மாதவன் “பாலிவுட்டில் மிகக் குறைவான தென் இந்தியப் படங்கள் மட்டுமே வெற்றிப்பெற்று இருக்கிறது என்றார்”
மேலும் பேசிய மாதவன் “புஷ்பா, கேஜிஎஃப், பாகுபலி, ஆர்ஆர்ஆர் ஆகியவை மட்டும்தான் எனக்கு தெரிந்து மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. இந்த வெற்றிகள் மூலம் இதுவே நிரந்தரம் என நாம் நினைத்துக்கொள்ள கூடாது. அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. ஆனால் ரசிகர்களின் ரசனை பெருமளவுக்கு மாறியிருக்கிறது என்பது மட்டுமே உண்மை. மிக முக்கியமாக கொரோனா ஊரடங்கு காலத்தில் ரசிகர்கள் பல்வேறு மொழிப் படங்களையும் பார்த்து இருக்கிறார்கள்” என்றார்.