சென்னை: நீட் விலக்கு குறித்து பிரதமரிடம் பேச உள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் தெரிவித்தார்.
சென்னையில் இருந்து நேற்று இரவு டெல்லி சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 15வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு மற்றும் 14வது குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெகதீப் தன்கர் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதன்பின்னர், இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிறார்.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ” குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவரையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவர் சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்தது. குடியரசு தலைவரிடம் புதிய கோரிக்கை வைக்கவில்லை. மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினேன். தமிழகத்தின் அரசியல் சூழல் குறித்து பேசினோம். இந்த சந்திப்பு மனநிறைவாக இருந்தது. தொடர்ந்து இன்று மாலை 4.30 மணிக்கு பிரதமரை சந்திக்கவுள்ளேன்
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்கு வந்த பிரதமருக்கு நன்றி தெரிவிக்க உள்ளேன். தமிழ்நாட்டின் நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் வலியுறுத்தவுள்ளேன்.
பிரதமரை சந்திக்கும் போது நீட், புதிய கல்விக் கொள்கை, காவிரி பிரச்சனை, மேகதாது உள்ளிட்டவை குறித்து கோரிக்கை வைக்க உள்ளேன்” இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.