புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை, மீண்டும் வரும் 22ம் தேதி காலை 9:45 மணிக்கு கூடுகிறது. அன்றே, நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, ரூ.10,697 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
புதுச்சேரி அரசு ஒவ்வொரு ஆண்டும், மார்ச் மாதம் ஓராண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்வது வழக்கம். ஆனால், கடந்த 11 ஆண்டுகளாக மார்ச் மாதத்தில் ஒரு சில மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டும், அதன் பிறகு முழு பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
கவர்னர் உரை
அதன்படி இந்த 2022-23 நிதி ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட், கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்டது.இந்த பட்ஜெட் இம்மாதத்துடன் முடிவடைகிறது. அதை தொடர்ந்து, முழு பட்ஜெட் தாக்கல் செய்ய, கடந்த 10ம் தேதி, புதுச்சேரியின் 15வது சட்டசபையின், மூன்றாவது கூட்டத் தொடர் கவர்னர் தமிழிசை உரையுடன் துவங்கியது.
ஆனால், புதுச்சேரி அரசு அனுப்பிய ரூ.11 ஆயிரம் கோடி பட்ஜெட் கோப்பிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காததால், சபாநாயகர் செல்வம், சட்டசபையை காலவரையறை இன்றி ஒத்தி வைத்தார். இந்நிலையில், புதுச்சேரி அரசின் முழு பட்ஜெட் சமர்ப்பிக்க ரூ.10,697 கோடிக்கு மத்திய உள்துறை ஒப்புதல் வழங்கியது. அதனையொட்டி, பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான பணிகளை அரசு மேற்கொண்டு உள்ளது.
22ல் கூடுகிறது
அதனையொட்டி, கடந்த 10ம் தேதி காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்ட சட்டசபை, வரும் 22ம் தேதி திங்கள்கிழமை கூடுகிறது.அன்றைய தினமே, நிதித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்க சாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
இதுபற்றி, சபாநாயகர் செல்வம் கூறுகையில், ‘இந்த 2022-23 ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல், கடந்த 10ம் தேதி கவர்னர் உரையுடன் துவங்கியது. அன்றைய தினமே சட்டசபை கூட்டம் காலவரையரையன்றி ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும், வரும் 22ம் தேதி காலை 9:45 மணிக்கு சட்டசபை கூடுகிறது. அப்போது, நிதித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, இந்த நிதி ஆண்டிற்கான ரூ.10,700 கோடிக்கு முழு பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
அன்றைய தினம் அலுவல் ஆய்வுக் குழு கூடி, இந்த பட்ஜெட் கூட்டத் தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பதை முடிவு செய்யும்’ என்றார்.இதனால், பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து பட்ஜெட் மற்றும் கவர்னர் உரை மீதான விவாதமும், அதனைத் தொடர்ந்து பட்ஜெட் மானியக் கோரிக்கை மற்றும் தனி நபர் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற உள்ளது.இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 30ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்