இந்திய பெற்றோர்கள் கல்விக்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில் கல்விக்கான செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் முக்கியமான ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் ஒரு குழந்தை தனியார் பள்ளியில் படிக்க வேண்டும் என்றால் எவ்வளவு செலவாகும்..? இதேபோல் தனியார் கல்லூரியில் படிக்க வேண்டும் என்றால் எவ்வளவு செலவாகும்..? என்பது குறித்து முக்கியமான ஆய்வு செய்யப்பட்டது.
இதில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் கிடைத்துள்ளது. இது மிடில் கிளாஸ் பெற்றோர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதைத் தாண்டி பயமுறுத்தும் வகையில் உள்ளது.
தனியார் பள்ளிகள்
இந்தியாவில் தனியார் பள்ளிகளில் 3 வயது முதல் 17 வயது வரையில் ஒரு குழந்தை படிக்க வேண்டும் என்றால் சராசரியாகச் சுமார் 30 லட்சம் ரூபாய் அளவில் செலவாகிறது என ஈடி ஆன்லைன் ரிசர்ச் ஆய்வுகள் கூறுகிறது.

பெற்றோர்கள் புலம்பல்
மேலும் தனியார் பள்ளிகளில் செலவுகள் அதிகமாவது மட்டும் அல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் மாற்றங்கள் மூலம் நீண்ட கால அடிப்படையிலான செலவுகளைக் கணிக்க முடியாத நிலையில் உள்ளதாகப் பெற்றோர்கள் புலம்புகின்றனர். 2-5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கல்விக்கான கட்டணங்கள் உயர்கிறது.

மிடில் கிளாஸ் பெற்றோர்கள்
இதனால் மிடில் கிளாஸ் பெற்றோர்கள் கல்விக்கான செலவுகளை முன்கூட்டியே திட்டமிட முடியாத நிலையிலும், சரியான தொகையைச் சேமிக்க முடியாத நிலையிலும் உள்ளனர். இதன் எதிரொலியாக இந்திய மிடில் கிளாஸ் பெற்றோர்கள் ஒவ்வொரு ஆண்டும் சேமிப்பை தாண்டி கூடுதலான பணத்தைச் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

பணவீக்க தரவுகள்
இந்தியாவில் பணவீக்க தரவுகள் தனியார் பள்ளியில் இருக்கும் செலவுகளைக் கணக்கிடுவது இல்லை, இதனால் அரசு விலைவாசி தரவுகளுக்கும் கல்வி செலவுகளுக்கும் பெரிய அளவிலான வித்தியாசம் உள்ளது. இந்திய நுகர்வோர் பணவீக்க விகித கணக்கீட்டு முறையில் வெறும் 4.5 சதவீதம் மட்டுமே கல்விக்கான செலவுகள் பங்கு வகிக்கிறது.

கல்விச் செலவுகள் உயர்வு
2012-20க்கு இடையில் இந்தியாவில் கல்விச் செலவுகள் சுமார் 10-12% அதிகரித்துள்ளதாக EduFund கூறுகிறது. கல்விக் கட்டணம் மட்டுமல்ல, போக்குவரத்துக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணங்களும் அவ்வப்போது உயர்த்தப்படுவது பெற்றோரின் ஒட்டுமொத்த பட்ஜெட்டை பாதிக்கிறது.

பள்ளி சேர்க்கைக் கட்டணம்
ஒரு குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும் போது சேர்க்கைக் கட்டணம் அதாவது admission fees முக்கியச் செலவாகவும் ஒரு முறை செலவாகவும் உள்ளது. இந்தியாவின் முதல் தர நகரங்களில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் சேர்க்கை கட்டணம் ரூ.25,000 முதல் ரூ.75,000 வரை வசூலிக்கின்றன. சில பள்ளிகள், உடன்பிறந்தவர்கள் ஒரே நேரத்தில் சேர்ந்தால், பெற்றோருக்குத் தள்ளுபடிகள் வழங்குகின்றன, இது 10000 முதல் 20000 வரையில் இருக்கும்.

கல்விக் கட்டணம்
இதேபோல் முதல் மற்றும் இரண்டாம் தர நகரங்களில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் சராசரி கல்விக் கட்டணம் பள்ளியின் பிராண்டைப் பொறுத்து ஆண்டுக்கு ரூ.60,000-ரூ.1.5 லட்சம் வரை இருக்கிறது.

தொடக்கப் பள்ளி செலவுகள்
தொடக்கப் பள்ளிக்கான கல்விக் கட்டணம் ஆண்டுக்கு ரூ. 1.25 லட்சம் முதல் 1.75 லட்சம் வரை இருக்கிறது. இதன் மூலம் ஒரு குழந்தையின் ஆரம்பக் கல்விக்காக, 5.50 லட்சம் ரூபாய் அளவில் பெற்றோர்கள் செலவழிக்க வேண்டியுள்ளது.

நடுநிலைப் பள்ளி செலவுகள்
இதேபோல் நடுநிலைப் பள்ளிக்கான சராசரி ஆண்டுக் கட்டணம் சுமார் ரூ. 1.6 லட்சம் – 1.8 லட்சம் ரூபாயாக உள்ளது. இந்த நடுநிலைப் கல்விக்கான மொத்தச் செலவு ரூ.9.5 லட்சம்.

உயர்நிலைப் பள்ளி செலவுகள்
மேலும் 9ஆம் வகுப்பு முதல் பல பள்ளிகள் பெற்றோர்கள் புத்தகங்களுக்குத் தனித்தனியாக ஆண்டுக்கு ரூ. 4,000-7,000 செலுத்த வேண்டிய நிலை உள்ளது. நான்கு வருட உயர்நிலைப் பள்ளிக்கு ஆண்டுக்கு ரூ.1.8 லட்சம் முதல் ரூ.2.2 லட்சம் வரை செலவாகும். உயர்நிலைப் பள்ளிக் கல்விக்காக ஒட்டுமொத்தமாக ரூ.9 லட்சம் வரையில் செலவாகிறது.

போக்குவரத்துக் கட்டணம்
பெரும்பாலான பள்ளிகள் போக்குவரத்துக்கு நகரத்தைப் பொறுத்து மாதத்திற்கு ரூ.1,500-2,500 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றன. பெற்றோர்கள் போக்குவரத்துக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ. 25,000 செலுத்துகின்றனர். மேலும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கும் போது எதிர்காலத்தில் இது மாறலாம்.

அரசுப் பள்ளி
பெற்றோர்கள் தங்கள் குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்க்க விரும்பினால், பள்ளிக் கல்விக்கான விலை ஆண்டுக்கு மொத்தமாக ரூ.15,000-20,000 ஆகக் குறையும் என இந்த ஆய்வுகள் கூறுகிறது. தமிழ்நாடு போன்ற கல்விக்கு அதிக முக்கியத்துவமும், சலுகைகளும் அள்ளி கொடுக்கும் மாநிலத்தில் இதன் அளவு மிகவும் குறைவு.

கணிப்பு
இந்தக் கல்வி செலவுகளை அடுத்த 10 வருடத்திற்கு வைத்துக்கொள்ள முடியும். இதேபோல் கல்லூரி செலவுகளைக் கணக்கிட்டால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 சதவீதம் வரையில் அதிகரித்து வருகிறது. இதேபோல் ஒவ்வொரு கல்விக்கும் கல்லூரிக்கும், நகரத்திற்கும் இந்தச் செலவுகள் மாறுபடுகிறது.

MBBS படிப்பு
உதாரணமாக MBBS படிப்புக்கு இந்தியாவில் சராசரியாகத் தனியார் கல்லூரிகளில் 2022ஆம் ஆண்டில் 45 லட்சம் வரையில் செலவாகிறது, இது 2032ல் 1.16 கோடி ரூபாயாக இருக்கும், 2042ஆம் ஆண்டில் 3.02 கோடி ரூபாயாக இருக்கும்.

BE மற்றும் B.Tech படிப்பு
இதேபோல் BE மற்றும் B.Tech படிப்புக்கு இந்தியாவில் சராசரியாகத் தனியார் கல்லூரிகளில் 2022ஆம் ஆண்டில் 12 லட்சம் வரையில் செலவாகிறது, இது 2032ல் 31.1 லட்சம் ரூபாயாக இருக்கும், 2042ஆம் ஆண்டில் 80 லட்சம் ரூபாயாக இருக்கும்.

MBA படிப்பு
MBA படிப்புக்கு இந்தியாவில் சராசரியாகத் தனியார் கல்லூரிகளில் 2022ஆம் ஆண்டில் 25 லட்சம் வரையில் செலவாகிறது, இது 2032ல் 64.84 லட்சம் ரூபாயாக இருக்கும், 2042ஆம் ஆண்டில் 1.68 கோடி ரூபாயாக இருக்கும். இவை அனைத்தும் பெரிய கல்லூரிகள், பெரு நகரக் கல்லூரிகள் பொருத்து அதிகரிக்கும்.
School fees costs ₹30 lakh, college fees cost 1 crore; Middle class parents on worries
School fees costs ₹30 lakh, college fees cost 1 crore; Middle class parents on worries பள்ளி-க்கு 30 லட்சம், கல்லூரிக்கு 1 கோடி.. மிடில் கிளாஸ் பெற்றோர்கள் ஷாக்..!