பாஜ நாடாளுமன்ற குழுவில் அதிரடி மாற்றம் நிதின் கட்கரி, சவுகான் திடீர் நீக்கம்: எடியூரப்பா உட்பட 6 பேர் சேர்ப்பு

புதுடெல்லி: பாஜ நாடாளுமன்ற குழுவில் இருந்து ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, மபி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் திடீரென நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட 6 புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். பாஜ கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் உச்சபட்ச அதிகாரம் கொண்டது நாடாளுமன்ற குழு. இக்குழுவில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில், இக்குழுவில் நேற்று அதிரடி மாற்றம் செய்யப்பட்டது. ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். நட்டா தேசிய தலைவராக பதவியேற்ற பிறகு 2 ஆண்டுகள் கழித்து செய்யப்பட்டுள்ள முதல் மாற்றம் இது. கட்கரி, சவுகானுக்கு பதிலாக கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா, இக்பால் சிங் லால்புரா, கே.லட்சுமண், சுதா சதவ், சத்யநாராயண் ஜாடியா, அசாம் முன்னாள் முதல்வர் சர்பானந்தா சோனோவால் ஆகிய 6 பேர் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். மாநிலங்களுக்கும், பல்வேறு சமூகங்களுக்கும் முக்கியத்துவம் தரும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக பாஜ விளக்கம் அளித்துள்ளது. தென் இந்தியாவில் இருந்து எடியூரப்பா, கே.லட்சுமணனும், வடகிழக்கில் இருந்து சோனோவாலும், பஞ்சாப்பை சேர்ந்த இக்பால் சிங் லால்புரா, நாடாளுமன்ற குழுவில் இடம் பெறும் முதல் சீக்கியரும், சிறுபான்மையினரும் ஆவார். முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஜாடியா தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர். லட்சுமணன், சுதா யாதவ் இருவரும் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள். சுதாவின் கணவர் கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு நாடாளுமன்ற குழுவில் இடமளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நிமிடத்தில் அவரது பெயர் பரிந்துரைக்கப்படவில்லை என பாஜ வட்டாரங்கள் தெரிவித்தன.* தேர்தல் குழுவில் வானதி சீனிவாசன்பாஜ மத்திய தேர்தல் குழுவில் பாஜ தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன், மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ஒன்றிய அமைச்சர் பூபேந்தர் யாதவ் ராஜஸ்தான் தலைவர் ஓம் மாத்தூர் ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் அனைவரும் தேர்தல் குழுவிலும் இடம் பெற்றிருப்பார்கள். கட்கரி, சவுகான் இருவரும் தேர்தல் குழுவில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.