சென்னை: பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் ‘தமிழ்நாட்டின் தானியங்கள்’ என்ற பெயரில் 9 வகையான தானியங்களை நினைவுப் பரிசாக அளித்தார்.
சென்னையில் இருந்து நேற்று இரவு டெல்லி சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். இதன்பின்னர், இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின்போது, தமிழகத்தின் பாரம்பரிய தானிய வகைகளை நினைவுப் பரிசாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாட்டின் தானியங்கள் என்ற பெயரில் மாப்பிளை சம்பா, கருப்பு கவுனி, குள்ளக்காரி, சீரக சம்பா, கேழ்வரகு, கம்பு, சாமை, தினை, வரகு உள்ளிட்ட 9 வகையான தானியங்களை நினைவு பரிசாக அளித்தார். அவற்றின் விவரம்:
- மாப்பிள்ளை சம்பா – சிகப்பு நிறத்தால் ஆண்ட்டி ஆக்சிடண்ட் தன்மையை கொடுத்து நோயின்றி காக்கும் அரிசி.
- குள்ளக்கார் – பாலூட்டும் பெண்களுக்கும் கருத்தரிக்கும் பெண்களுக்கும் ஊட்டம் தரும் அரிசி.
- கருப்புக்கவுனி – நெடுங்காலம் அரசர்களுக்கு மட்டும் பயிரிடப்பட்ட ஆந்தோசயனைன் நிறைந்த புற்றைத் தடுக்கும் கருப்பு அரிசி.
- சீரகச்சம்பா – பாலாற்றங்கரையில் பயிராகும் தனித்துவ மணம் கொண்ட சுவைமிக்க அரிசி.
- குடவாழை – தோலுக்குப் பொலிவு அளிக்கும் மரபு சிகப்பு அரிசி இது.
- கம்பு – அருந்தானியங்களின் அரசன் இவன். அரிசியைவிட 8 மடங்கு அதிக இரும்புச்சத்து கொண்ட சர்க்கரை நோயாளிக்கான லோ கிளைசிமிக் அரிசி.
- வரகு – தமிழ் மூதாட்டி அவ்வை விரும்பிக் கேட்டு உண்ட மெல்ல சர்க்கரை தரும் மரபு தானியம்.
- சாமை – பழங்குடி மக்கள் பயிராக்கி படைத்திடும் மருத்துவ குணமிக்க சிறுதானியம்.
- தினை – கண்ணுக்கும் குழந்தைக்கும் நலம் தரும் பொன்னிற தானியம்.
- கேழ்வரகு – இரும்பும் கால்சியமும் நிறைந்த, தாய்ப்பாலுக்கு அடுத்ததாக தரப்பட வேண்டிய முதல் திட உணவு