சென்னை: பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லியில் சந்தித்தார். அப்போது, நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, காவிரி பிரச்சினை, மேகதாது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்த கோரிக்கை மனுவை அவரிடம் அளித்தார்.
சென்னையில் இருந்து நேற்று இரவு டெல்லி சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். இதன்பின்னர், இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின்போது, செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்கு சென்னை வந்த பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பின்போது நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, காவிரி பிரச்சினை, மேகதாது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்த கோரிக்கை மனுவை பிரதமரிடம் முதல்வர் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், தமிழ்நாட்டின் நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் குறித்தும் பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பின்போது, தமிழகத்தின் பாரம்பரிய தானிய வகைகளை நினைவுப் பரிசாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.