பிரமாண்டங்களில் இவரு அப்பவே அப்படி: இயக்குநர் ஷங்கர் பிறந்தநாளில் ஒரு ஸ்பெஷல் ஃப்ளாஷ்பேக்!

சென்னை: தமிழ்த் திரையுலகில் ‘ஜென்டில்மேன்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஷங்கர்.

பிரமாண்ட இயக்குநர் என பெயர் பெற்ற ஷங்கர் இன்று தனது 59வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

ப்ளாக் பஸ்டர் படங்களை இயக்கியுள்ள ஷங்கரின் கனவுப் படம் இதுவரை உருவாகவில்லை. அது என்ன படம் என்பது உங்களுக்கு தெரியுமா.?

உதவி இயக்குநராகவே கலக்கிய ஷங்கர்

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் மிக முக்கியமானவர் ஷங்கர். ‘ஜென்டில்மேன்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஷங்கர், அதற்கு முன்னர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், பவித்ரன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். ஷங்கர் உதவி இயக்குநராக இருக்கும் போதே, நல்ல சம்பளம், கார் என வசதியாக வாழ்ந்தவர் என சொல்லப்படுவதுண்டு. இந்நிலையில், அவர் இன்று தனது 59வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து நடிகர் கமல் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

ஜென்டில்மேன் கொடுத்த சூப்பர் என்ட்ரி

ஜென்டில்மேன் கொடுத்த சூப்பர் என்ட்ரி

நடிகராக வேண்டும் என்பதே ஷங்கரின் ஆசையாக இருந்தது. ஆனால், உதவி இயக்குநராக சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய அவர், ‘ஜென்டில்மேன்’ படத்தில் இயக்குநராகிறார். கே.டி.குஞ்சுமோன் தயாரித்த இந்தப் படத்திற்கு, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். ஜென்டில்மேன் படத்தில் முதலில் சரத்குமார் தான் நடிக்கவிருந்ததாக சொல்லப்படுகிறது, ஆனால் அர்ஜுன் நடித்தார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றாலும், இடஒதுக்கீடு குறித்து தவறான புரிதலை ஏற்படுத்தியதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

அடுத்தடுத்து பிரமாண்ட திரைப்படங்கள்

அடுத்தடுத்து பிரமாண்ட திரைப்படங்கள்

முதல் படத்தில் கிடைத்த வசூல் ரீதியான வெற்றியால், ஷங்கர் தொடர்ந்து பிரமாண்டமான கமர்சியல் படங்களை இயக்கத் தொடங்கினார். பிரபுதேவா நடிப்பில் அடுத்து வெளியான ‘காதலன்’, இளைஞர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. ரஹ்மானின் இசையும் பிரபுதேவாவின் நடனமும், இரண்டுக்கும் ஷங்கர் கொடுத்த கிராஃபிக்ஸ் ட்ரீட்டும். ரசிகர்களை மிரட்டியது.

இந்தியன், ஜீன்ஸ், முதல்வன்

இந்தியன், ஜீன்ஸ், முதல்வன்

ஷங்கரின் இயக்கத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது கமல் நடித்த ‘இந்தியன்.’ ஊழலை பின்னனியாகக் கொண்டு உருவான இந்தப் படத்தில் கமல் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அடுத்ததாக பிரசாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்த ‘ஜீன்ஸ்’ படத்தை இயக்கினார். காதலையும் இவ்வளவு பிரமாண்டமாக காட்ட முடியும் என ஷங்கர் நிரூபித்தார். தொடர்ந்து அர்ஜுன் நடித்த ‘முதல்வன்’ படத்தை இயக்கினார். இந்த கதை ரஜினிக்காக எழுதியது என ஷங்கர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ரஜினியுடன் சூப்பர் காம்போ

ரஜினியுடன் சூப்பர் காம்போ

இயக்குநராக மட்டும் இல்லாமல், வெயில், இம்சை அரசன் 23ம் புலிகேசி, காதல் போன்ற படங்களையும் தயாரித்தார். அதோடு ‘பாய்ஸ்’, விக்ரம் நடிப்பில் ‘அந்நியன்’ படங்களையும் இயக்கியிருநந்தார். அதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்த ஷங்கர், சிவாஜி, எந்திரன், 2.O போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தினார். அதேபோல், விஜய்யின் ‘நண்பன்’ விக்ரமின் ‘ஐ’ படங்களையும் இயக்கினார்.

ஷங்கரின் கனவுப் படம் இதுதான்

ஷங்கரின் கனவுப் படம் இதுதான்

‘ஜென்டில்மேன்’ முதல் தற்போது இயக்கி வரும் ராம் சரண் படம், இந்தியன் 2 என அனைத்துமே பிரமாண்டத்தின் உச்சம் எனலாம். தமிழில் பிரமாண்ட இயக்குநர் என்ற அடையாளத்தோடு வலம் வரும் ஷங்கருக்கு மிகவும் பிடித்த படம், ஈரானிய இயக்குநர் மஜித் மஜித்தின் ‘Children of Heaven’ தான். அவரும் அதேபோல் கலைநயத்துடன் கூடிய யதார்த்தமான படங்களை இயக்கவே ஆசைப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். மேலும், முதலில் ரேவதியை நாயகியாக வைத்து, பெண்ணியம் சார்ந்த ஒரு லோ பட்ஜெட் படத்தை இயக்க வேண்டும் என்பதே அவரின் ஆசையாம். ஆனால், இதுவரை அது நடக்கவே இல்லை என்பது தான் உண்மை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.